புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும்

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

புதிய பயங்கரவாத சட்டம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை வரைவுக் குழு இன்று(18) மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் இதுதவிர, ஊழல் ஒழிப்புச் சட்டம், நாளை 19ஆம் திகதி பாராளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

Spread the love