சீனக் கப்பல் வரமுன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கை வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகையில் அந்தக் கப்பல் வருவதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பணிமனைப் பிரதானி சாகலரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையும் இந்தியாவும் தரைப்பாலம் மற்றும் தேசிய கட்டங்களின் ஒன்றோடொன்று இணைப்பு உள்ளிட்ட இணைப் புத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உயர்மட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ள சூழலில் இந்த விஜயம் நடைபெறுவதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கும்டையில் பெட்ரோலிய உற்பத்திகளை பரிமாற்றம் செய்வதற்கான குழாய் உருவாக்கம் தொடர்பிலேயே அமைசரின் திருகோணமலை விஜயம் அமைந்திருக்கும். தவிர, சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷியான் 6 வருவதற்கு முன்னதாகவே இந்திய அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது. எனினும், சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கைன்னும் அனுமதி வழங்கவில்லை.ஆனாலும் அதற்கான அனுமதி வழங்கப்படுமென்றே தெரிவிக்கப்படுகிறது.

Spread the love