இரத்தக் களரியை எதிர்நோக்கும் பெரு!


உலகின் பழம்பெரும் நாகரிகமான இன்கா நாகரிகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் பெரு நாட்டில் நிகழும் மக்கள் போராட்டங்களில் இதுவரை 50பேர் வரையானோர் கொல்லப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இடதுசாரி ஜனாதிபதியான பெட்ரோ காஸ் ரில்லா பதவியில் இருந்து அகற்றப்பட்ட நாள் முதலாக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மோதல்களாக மாறியுள்ளன.


மக்கள் குரலை இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனையும் ஆட்சியாளர்களின் போக்கு காரணமாக போராட்டத்தின் வீரியம் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருவதைப் பார்க்கமுடிகின்றது. ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள நாட்டின் ஜனாதிபதி, தான் பதவி விலகப்போவதில்லை எனச் சூளுரைத்துள்ளார். பல பத்தாண்டுகளாக அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாத நாடுகளுள் ஒன்றாக பெரு இருந்து வருகின்றது. தென்னமெரிக்க நாடுகளில் எழுச்சி பெற்றுவரும் இடதுசாரி அலையை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அழிவு நடவடிக்கைகள் காரணமாக இயற்கை வளம் மிக்க பெரு நாட்டு மக்களில் அநேகர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களின் படி அந்த நாட்டில் 51சதவீத மான மக்கள் உணவு அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு, அந்த நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடத் துடிக்கும் சர்வதேச வணிக நிறுவனங்களுக்குச் சாமரம் வீசும் ஆட்சியாளர்களையே பதவியில் அமர்த்துவதற்குத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் ஏவலர்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் எந்த விதமான தந்திரத்தையும் பாவிக்கத் தயாராக உள்ளதைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. உலகின் செப்பு ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் பெரு உள்ளது. அது தவிர வெள்ளி, தங்கம், நாகம், ஈயம் மற்றும் தகரம் ஆகிய கனிம வளங்களையும் அந்த நாடு அதிக அளவில் கொண்டுள்ளது. இத்தகைய இயற்கை வளங்களை அந்த நாடு அதிகளவில் கொண்டுள்ள போதிலும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர், குறிப்பாக இத்தகைய கனிம வளங்கள் அதிகமாகக் காணப்படும் மலைநாட்டுக் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழும் நிலையே உள்ளது.


5 ஆண்டுகளில் 6 ஜனாதிபதிகளை கண்ட உலகில் ஒரேயொரு நாடாக பெரு விளங் குகின்றது. இது அந்த நாட்டின் அரசியல் உறுதிப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை விளக்கப் போதுமான ஒரு எடுத்துக்காட்டு, 18 மாதங்களுக்கு முன்னர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் ஆசிரியரான பெற்ரோ காஸ்ரில்லா இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர். குறைந்தளவு பெரும்பான்மையுடனேயே அவரால் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது. தென்னமெரிக்காவில் உள்ள ஏனைய நாடு களைப் போலவே ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்குமான இடைவெளி பெருவிலும் மிகப்பாரியதாகவே உள்ளது.


அதேபோல் அரசியல் அடிப்படையிலான சார்பு நிலையிலும் வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான பிளவு மிக வெளிப்படையாகத் தெரியும் ஒன்றாக உள்ளது. வறிய மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் என்று இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லாதோர் இடதுசாரிக் கருத்துக்களை ஆதரித்து நிற்கிறார்கள். அவர்களின் குரலாக காஸ்ரில்லோ வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் பாராளுமன்றத்தில் அவரது
கட்சியால் பெரும்பான்மையைத் தக்கவைக்க முடி யாமல் போய் விட்டது.


பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள வலதுசாரிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், சர்வதேச சுரங்க நிறுவனங்களின் முகவர்கள் தொடர்ச் சியாக காஸ்ரில்லோவைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஈற்றில் டிசம்பர் 7இல் வெற்றியும் பெற்றனர். அது மாத்திரமன்றி, காஸ்ரில்லோவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு துணை ஜனாதிபதியாக வெற்றிபெற்ற டினா பொலு வார்ட்டேவை தமது பக்கமும் இழுத்துக் கொண்டுள்ளனர்.
தனது பதவியைப் பறிப்பதற்கு பாராளுமன்றம் மேற்கொள்ளும் முயற்சியை முறி யடிக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு காஸ்ரில்லோ மேற்கொண்ட
முயற்சி வெற்றியளிக்கவில்லை. அவருக்கு முன்னதாகவே முந்திக் கொண்ட பாராளுமன்றம் அவரைப் பதவியில் இருந்து அகற்றியது. விசாரணை என்ற பெயரில் அவரை 18 மாதத் தடுப்புக் காவலிலும் வைத்துள்ளது. காஸ்ரில்லாவை விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம் பமான மக்கள் போராட்டங்கள் தற்போ தைய பெண் ஜனாதிபதியான டினா பொலு வார்ட்டே பதவி விலக வேண்டும், பாராளு மன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக் கைளை முன்வைத்து தொடர்கின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் 2026இல் நடைபெற வேண்டிய தேர்தல்களை முன்கூட்டியே 2024இல் நடத்துவதற்கு தற்போதைய அரசுத் தலைவி சம்மதம் தெரிவித்து இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கு ஆர்ப்பாட்டக் காரர்கள் தயாராக இல்லாத சூழலே உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாகப் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் நாட்டின் தென் மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பிரதான வீதிகளை மறித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் லீமாவை முற்றுகையிடும் முயற் சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கென பல வாகனங்களில் சாரி சாரியாக அவர்கள் தலைநகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் வருகையைத் தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் பல இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி உள்ளபோதிலும் மக்களின் வருகையை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நீர் பீச்சும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் காவல் துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் 50வரையானோர் கொல்லப்பட்டுள்ளதாகசெய்திகள் வெளியாகி உள்ளன.

இதில் ஆர்பாட்டக்காரர்களால் எரியூட்டிக் கொல்லப்பட்ட ஒரு காவல்துறை உறுப்பினரும் அடக்கம். திட்டமிட்ட முறையிலோ, அரசியல் கட்சி ஒன்றினாலோ ஒருங்கிணைக்கப்படாத போராட்டமாக மக்கள் போராட்டங்கள் அமைந்துள்ள நிலையில் போராட்டத்தின் பின்னணியில் பயங்கரவாத சக்திகள் உள்ளதாக ஆட்சியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அயல் நாடான பொலிவியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஈவோ மொராலஸ் ஆர்ப்பாட்டக்காரர்களின் பின்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம் அவர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. அது மாத்திரமன்றி, அவர் பெரு நாட்டினுள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


சாமானிய மக்களின் வெளிப்பாடாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓயக்கூடிய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாறாக, மேலும் அதிகரிக்கும் சாத்தியங்களே உள்ளன. அதேவேளை, ஆளும் தரப்பும் வெகுமக்களின் செவிசாய்க்கும் கோரிக்கைகளுக்குச் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை. பெருவில் மிகப் பாரிய இரத்தக் களரிக்கான ஒரு வாய்ப்பு உள்ளதாகவே தற்போதைய நிலவரங்கள் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன, இதனைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை தற்போதைய அரசுத் தலைவியே கொண்டுள்ளார்.ஆனால்,அவரின்விருப்பமோ வேறாக உள்ள நிலையில் பெருவில் நிலவும் கொந்தளிப்பு தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

credit to

Spread the love