மேற்குலகினால் கைவிடப்படுகிறாரா மோடி ?

இந்திய பாராளுமன்றத்துகான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு தடவைகள் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் கனவில் காய்களை நகர்த்தி வருகின்றது.


கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிளவுண்டு கிடந்த எதிர்க்கட்சிகள், தமது தவறை உணர்ந்து, பொது அணியொன்றை அமைத்து, தேர்தலை எதிர்கொண்டு, பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பத் திட்ட மிட்டுச் செயலாற்றி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி நடத்திவரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையான ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ காரணமாக அக்கட்சியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. மறுபுறம், தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்து தன்னை ஒரு பலமான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி எதிர்பாராத வகையில் பஞ்சாப் மாநிலத் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்து தன்னை ஒரு தேசியக் கட்சியாக மாற்றிக் கொண்டுள்ளது. ஒரு வகையில் பா.ஜ.க.வின் ஆதரவு வாக்குகளையே இந்தக்கட்சி பறித்துக் கொள்வதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் பி.பி.சி. வெளியிட்டுள்ள ஒரு ஆவணப்படம், மோடியின் எதிர்காலம் தொடர்பான விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.

இந்தியா மோடி (தொடர்பிலான) கேள்விகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம், 2002இல் குஜாரத் மாநிலத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட கலவரம் தொடர்பான பல கேள்விகளை முன்வைக்கின்றது. ஜனவரி 17ஆம் திகதி வெளியான இந்த ஆவணப் படத்துக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த இந்திய ஒன்றிய அரசு, இந்த ஆவணப்படம் பிரித்தானியக் காலனித்துவ மனோபாவத்தின் பிரதிபலிப்பு மற்றும் உள்நோக்கம் கொண்டது எனத்தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இந்தக்காணொளியைத் தடைசெய்துள்ளது.


முன்னாள் மற்றும் நடப்புக் காலனித்துவ நாடான பிரித்தானியா காலனித்துவ மனோ பாவத்துடன் நடந்து கொள்வது ஒன்றும் புதுமையான செய்தி அல்ல. மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிப் பேசும் பிரித்தானியா வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து என்பவற்றின் சுதந்திரம் தொடர்பான விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றது என்பதே இந்த விடயத்தை விளக்கப்போதுமான எடுத்துக்காட்டுகள். அதேபோன்று மோடி குறித்த ஆவணப் படத்தை வெளியிட்டுள்ள பி.பி.சி. நிறுவனத்தின் நடுநிலைத்தன்மை தொடர்பிலும் பல விமர்சனங்கள் உள்ளன. ‘மோடி தொடர்பான ஆவணப்படத்தைத் தயாரித்த பி.பி.சி., வின்ஸ்ரன் சேர்ச்சில் தொடர்பில் இப்படியான ஒரு ஆவணப் படத்தைத் தயாரிக்க முன்வருமா?’ என எழுப்பப்படும் கேள்வியும் நியாயமானதே. இவை அனைத்தும் விவாதத்துக்கு உட்பட்ட விடயங்களே என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.


ஆனால், இந்த விவாதங்களை முன்னிறுத்தி குஜாரத் சம்பவத்தை இருட்டடிப்புச் செய்வதை அனுமதிக்க முடியாது. 2002 பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட்டிருக்கக் கூடியவை. ஆனால், அவை தடுக்கப்படவில்லை என்பதே இங்கே முக்கியமான விடயம். அது மாத்திரமன்றி, மேலிட ஆதரவு இன்றி இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்க முடியாது என்பதுவும் ஆவணப்படம் முன்வைக்கும் வாதம், அயோத்தியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த கரசேவகர்கள் என்னும் இந்துத் தீவிரவாதிகள் பயணம் செய்த தொடருந்து கோத்ரா தொடருந்து நிலையத்தில் தரித்து நின்றிருந்தபோது எரிக்கப்பட்ட சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தை முஸ்லிம் தீவிரவாதிகளே நிகழ்த்தியதாக, எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்பட்ட செய்திகளே தொடர் வன்முறைக்குக் காரணமாயின. அரசாங்கத் தகவல்களின் பிரகாரம், நடைபெற்ற 3 நாள் வன்முறையில் 1,044 பேர் கொலையுண்டனர். 223 பேர் காணாமற்போயினர். 2,550 பேர் காயங்களுக்கு இலக்காகினர். இறந்தவர்களில் 790 பேர் இஸ்லாமியர்கள். 254 பேர் இந்துக்கள். ஆனால், ஆவணப் படத்தகவல்களின் பிரகாரம் இந்த வன்முறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளிலும் பாரபட்சம் நிகழ்ந்துள்ளது.

திட்டமிட்ட முறையில் இனச்சுத்திகரிப்பு நோக்கத்துடன் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வைத் திட்டமிட்டு நடத்திய விஸ்வ இந்து பரிஷத் என்னும் அமைப்பு அதில் வெற்றியும் பெற்றுள்ளது என்கிறது இந்த ஆவணப்படம். இந்தச்சம்பவம் நடந்த பெப்ரவரி 27 அன்று அப்போதைய முதலமைச்சரான மோடி மாநாட்டை நடத்தியிருந்தார். பொலிஸ் உயர் அதிகாரிகளும், அரச உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில், ‘நடைபெற்ற சம்பவம் தொடர்பில் இந்துக்கள் ஆத்திரம் கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் கோபத்தைத் தணித்துக்கொள்ள நீங்கள் இடமளிக்கவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாநில உள்துறை அமைச்சரான ஹரேன் பாண்டயா. பொலிஸ் உயரதிகாரியான சஞ்சீவ் பட், நிகழ்வில் நேரடியாகக்கலந்து கொள்ளாது விடினும் புலானாய்வுத் தகவல்களைப் பெற்றிருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் இந்த விடயத்தை உறுதி செய்திருந்தனர். அவ்வாறு கூறிய ஹரேன் பாண்டயா அடுத்த வருடமே இனந் தெரியாத
முறையில் படுகொலையானார். மற்றிரு வரும் கைதாகி சிறை வைக்கப்பட்டு உள்ளனர். அதேவேளை, இந்தப்படுகொலை தொடர்பில் குற்றமற்றவர் என மோடி நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார். வேறு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 17 பேர் கொலை தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த 22 பேர் இந்த ஆவணப் படம் வெளியான வாரத்திலேயே விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள்.


இந்த ஆவணப் படம் சொல்லும் செய்திகள் எவையும் புதிய தகவல் அல்ல. ஏற்கனவே பல்வேறு நிலைகளில், பல்வேறு ஆய்வுகளில், பல்வேறு வழக்குகளில் பேசப்பட்ட, பகிரப்பட்ட தகவல்களே. பொதுவெளியில் இன்றும் பார்க்கக்கூடிய செய்திகளாக அவை உள்ளன. ஆனால், பி.பி.சி. 21 ஆண்டுகளின் பின்னர் அவற்றைத் தொகுத்து ஆவணப்படமாக வெளியிடும் போது, அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. அதிலும், குறித்த ஆவணப்படத்தில் பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜக்ஸ்ரோ நேரில் தோன்றி வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் அந்த ஆவணப்படத்தின் கனதி அதிகரிக்கின்றது.

இந்த ஆவணப் படத்தில் தெரியப்படுத்தப்படும் மோடியின் கடந்தகாலம் தெரிந்த நிலையிலேயே 2014 தேர்தலில் மேற்குலகம் அவருக்கு ஆதரவு வழங்கி இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பதவி வகித்த பெண்மணி மோடியை நேரில் சந்தித்துப் பேசிய நிழல்படங்கள் தேர்தல் காலகட்டத்தில் ஊடகங்களில் வெளிவந்திருந்தன, அன்றைய காலகட்டத்தில் மோடி மீது பிரித் தானியா மற்றும் அமெரிக்கா என்பன பயணத் தடை விதித்திருந்தன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


தற்போது ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பில் மோடி உள்ளார். அது மாத்திரமன்றி அடுத்த வருடத்தில் பொதுத்தேர்தலையும் அவர் எதிர்கொண்டுள்ளார். இந்த வேளையில் குறித்த ஆவணப்படம் வெளியியடப்பட்டமை விசேட கவனத்துக்கு உரியது. அண்மைக்காலமாக இந்து தீவிரவாதத்தின் எழுச்சி தொடர்பான செய்திகள் அதிகம் வெளிவருவதைப் பார்க்க முடிகின்றது. இந்திய நாட்டின் எல்லையைக் கடந்து இந்து தீவிரவாதம் பரவ முயற்சிப்பது தொடர்பிலான எச்சரிக்கை மேற்குலகில் விடுக்கப்பட்ட நிலையில் பி.பி.சி. ஆவணப்படம் வெளியாகி மோடிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும், அதன் மூல அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்துக்கும் சொல்ல வரும் செய்தி ஒன்றுதான். மேற்குலகம் உங்களைக் கைவிட ஆரம்பித்திருக்கின்றது, புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்) என்பதே அந்தச் செய்தி..

credit to

Spread the love