ஈரான் மீதான தாக்குதல் ஒரு உலகப் போரை நோக்கி?

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மத்திய மாநிலமான இஸ்பாகானில் அமைந்துள்ள இராணுவ ஆயுதத் தொழிற்சாலையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ‘ட்ரோன்’ தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாக ஈரானிய படைத்துறை அமைச்சு கூறியுள்ளது. மூன்று ட்ரோன்கள் தாக்குதலில் பங்கு கொண்டதாகவும் அதில் ஒன்று விமான எதிர்ப்பு ஆயுதத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஏனைய இரண்டும் பாதுகாப்புப் பொறியில் சிக்கி வெடித்துச் சிதறியதாகவும் அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதல் முயற்சியில் உயிர்ச் சேதங்கள் எதுவும் நிகழ்வில்லை எனவும், தங்கள் தரப்பில் சிறிய அளவு சேதமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கும் அந்தச் செய்தியில் தாக்குதலின் பின்னணி தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மறுதினம் இரவு ஈராக், சிரிய எல்லையின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசித்த ஈரானிய புரட்சிகரக் காவல் படையின் வாகனத் தொடரணியும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. அல்கைம் எல்லையூடாகப் பயணித்த 25 பாரவூர்திகளே விமானங்களின் தாக்குதலுக்கு இலக்காகின. தாக்குதலுக்கு இலக்கான வாகனங்களில் 5 குளிரூட்டப்பட்ட பாரவூர்திகளும் அடங்கியிருந்ததாக சிரியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், இந்த இரண்டு தாக்குதல்கள் தொடர்பாகவும் துல்லியமான தகவல்கள் எதனையும் பெற முடியாத நிலை தற்போதுவரை உள்ளது. ஈரானில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ஊடகமான ‘வோல் ஸ்ரீட் ஜேர்னல்’ வெளியிட்டுள்ள செய்தியில் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க படைத்துறை அதிகாரியின் தகவல்களின்படி இந்தத் தாக்குதலை இஸ்ரேலே மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.


இந்தச்செய்தியையே மேற்குலக ஊடகங்கள் பலவும் வெளியிட்டுள்ளன. அதுமாத்திரமன்றி, இந்தத் தாக்குதலில் ஈரானில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உளவுப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களையும் அவை கொண்டுள்ளன. குறித்த தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்பதையும், அவை அமெரிக்காவின் இணக்கம் மற்றும் ஒத்துழைப்புடனேயே நடைபெற்றுள்ளன என்பதை ஊகித்துக் கொள்வதில் சிரமம் எதுவும் இருக்க முடியாது. ஏற்கனவே, இஸ்ரேல் இந்தப் பிராந்தியத்தில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.


ஈரானின் இஸ்பாகான் மாநிலம் அந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகக் கருதப்படுகின்றது. ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம், ஈரானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், பாரிய விமானப் படைத்தளம் உள்ளிட்ட பல படைத் துறை முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இந்த மாநிலத்திலேயே உள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் quadricopters எனப்படும் மிகச் சிறிய வகை ட்ரோன்களே பாவிக்கப்பட்டுள்ளன. இவை நீண்ட தூரப் பறப்புக்கு உகந்தவை அல்ல. இஸ்பாகான் மாநிலம் ஈரானின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.

எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதி வரை மிகச் சிறிய வகை ட்ரோன் பறந்து வருவதற்கான வாய்ப்பு இல்லாததால், தாக்குதல் ஈரானிய மண்ணில் இருந்தே நிகழ்த்தப்பட்டிருக்க முடியும் என்று படைத்துறை வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஈரானின் அணுசக்தி ஆய்வு மேற்குலகின் கண்ணில் விழுந்த தூசாக எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தான் நினைத்ததையெல்லாம் செய்து முடிக்க நினைக்கும் இஸ்ரேல் ஈரானிய அணு ஆராய்ச்சியை முறியடிக்கத் தனது வளங்கள் யாவற்றையும் பாவித்து வருகின்றமை தெரிந்ததே.


சர்வதேசச் சட்டங்கள் ஒன்றைக்கூட கவனத்தில் கொள்ளாத இஸ்ரேலின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடனேயே நடந்தேறுகின்றன என்பதுவும் வெளிப்படையான செய்தி. தற்போது கூட, ஈரானில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் பணிப்பாளர் வில்லியம் பேர்ண்ஸ் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார். தாக்குதல் நடைபெற்றதன் பின்னான இரண்டாம் நாள் திங்கட்கிழமை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அன்ரனி பிளிங்கன் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.


அதுமாத்திரமன்றி இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து மிகப்பாரிய இராணுவப் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தன. இந்தப் பயற்சி நடவடிக்கையில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த 7,500 வரையான படையினர் பங்கு கொண்டிருந்தனர். இந்தப்பயிற்சி ஈரான் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையே எனக் கருதப்படுகின்றது.

ஈரானின் அணு ஆராய்ச்சித் திட்டம் சக்தித் தேவைக்கானது மட்டுமே என ஈரான் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்ற போதிலும் அதனை நம்புவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் மேற்குலகம் தயாராக இல்லை என்பது வெளிப்படையானது. அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் உத்தேசம் எதுவும் தன்னிடம் இல்லையென ஈரான் தொடர்ச்சியாகக் கூறிவந்தாலும், ஒரு இறைமையுள்ள நாடாக தன்னைக் காத்துக் கொள்வதற்கு அணுகுண்டு ஒன்றே வழியென நம்பும் நிலைக்கு அந்த நாட்டைத் தூண்டும் வகையிலேயே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.


உலகின் காவல்காரனாகத் தன்னை அறிவித்துக் கொண்டு ஏனைய நாடுகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் அமெரிக்காவின் கொள்கை அணு ஆயுதங்களைக் கைவிட நினைக்கும் நாடுகளையும் கூட தமது முடிவை மறுபரிசீலனைக்கு இட்டுச் செல்பவையாகவே அமையும் என்பதே நிச்சயம்.

மறுபுறம், ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலையும் உக்ரேன் போரையும் தொடர்பு படுத்தும் செய்திகளும் ஒருபுறம் வெளியாகி உள்ளன. உக்ரேன் மீதான தாக்குதல்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தி வருகின்றது. இந்த ட்ரோன்கள் போருக்கு முன்னரேயே ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டவையென ஈரான் தெரிவித்த போதும் அதனை மேற்குலகு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்நிலையில், உக்ரேன் போரில் ஈரானும் பங்குதாரர் என்ற வகையிலான குற்றச்சாட்டுகள் உக்ரேன் தரப்பில் இருந்து தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலையெட்டி, உக்ரேன் அரசுத் தலைவர் ஷெலன்ஸ்கியின் ஆலோசகர்களுள் ஒருவர் தெரிவித்த கருத்து ஈரான் தரப்பில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. மைக்கைலோ பொடோலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஈரானின் குண்டுத் தாக்குதல் இரவு ட்ரோன் மற்றும் எறிகணை உற்பத்தி, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே உங்களை எச்சரித்து இருந்தோம்” என்ற தகவலை வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து ஈரானுக்கான உக்ரேன் தூதுவரிடம் தனது கண்டனத்தை ஈரான் பதிவு செய்திருந்தது.

நடந்த சம்பவம் தொடர்பில் ஷெலன்ஸ்கியின் ஆலோசகர் தனது சொந்தக் கருத்தை வெளியிட்டிருந்தாரா அல்லது உக்ரேனின் வேண்டுகோளின் பேரில்தான் ஈரானின் ட்ரோன் உற்பத்தித் தொழிற்சாலையை இலக்கு வைத்துத் தாக்குதல் இடம்பெற்றதா என்ற சந்தேகம் இந்த இடத்தில் எழுகிறது. மொத்தத்தில், உலகின் ஒரு மூலையில் நடைபெறும் போர், படிப்படியாக உலகப் போராக மாறும் அபாயத்தின் அறிகுறியே ஈரானியத் தாக்குதல் சம்பவம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த உண்மையை நானும் நீங்களும் தெரிந்து கொள்வதால் நிலைமையில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. வல்லரசுகள் உணர்ந்தால் மாத்திரமே மாற்றம் சாத்தியம். ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது வரை இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

credit to:

Spread the love