நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ?

2001ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்று 2004ஆம் ஆண்டில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக பாராளுமன்றத்திலும், உலக அரங்கிலும் ஒலித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணாமல் போயுள்ளது. காலத்தின் தேவையாக உருவாகி, காலத்தின் தேவையை நிறைவுசெய்து, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும் பெற்றிருந்த கூட்டமைப்பு அற்ப காரணங்களுக்காக, அற்ப மனிதர்களால் சிதைக்கப்பட்டுள்ளது.


மக்கள் நலனை மறந்து, தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் அத்தகைய அற்ப மனிதர்களின் முடிவு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் இருப்பையே கேள்விக்கு இலக்காக்கி உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைக்கொள்கையுடன் இரு பத்தாண்டுக ளுக்கு மேல் பயணித்த கூட்டமைப்பு, அத் தகைய ஒரு கூட்டை உருவாக்க தமது இன் னுயிர்களை இழந்தவர்களின் தியாகங்களைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ள அதேவேளை சிங்களப் பேரினவாதம் நீண்டகாலம் எதிர் பார்த்த இலக்கை எட்டுவதற்கான வாய்ப் பையும் வழங்கியுள்ளது.

வாதப்பிரதிவாதங்கள் எத்தகையதாக இருந்தாலும் கூட்டமைப்பின் சிதைவுக்கான முழுப்பொறுப்பையும் தமிழரசுக் கட்சியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். மட்டக்க ளப்பில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மத்தியக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே, கூட்ட மைப்பைத் துறந்து தனித்துப் போட்டியிடும் முடிவு அறிவிக்கப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தல் முறைமையின் கீழ் பல கட்சிகளாகப் போட்டியிடுவது ‘தொழில்நுட்ப’ அடிப்ப டையில் சாதகமாக அமையும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டாலும் அது உண்மைக் காரணமல்ல என்பதை பின்னாளில் பொது மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் தமி ழரசுக் கட்சிப் பிரமுகர்கள் முன்வைத்த கருத் துகள் தெட்டத்தெளிவாக உணர்த்தியுள்ளன.


கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் நிலவிய முரண்பாடுகளின் வெடிப்பாகவே கூட்டமைப்பின் சிதைவுள் ளது என்பதை மறுப்பதற்கில்லை, கூட்ட மைப்பில் நிகழ்ந்த இந்த கட்சிகளின் வெளி யேற்றம் முதலில் நடந்த ஒன்றல்ல. ஏற்க னவே தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறி உள்ளன. கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறக் காரணம் அவருக்கும் புலிகளுக்கும் இடையில் விடுதலைப் உருவான முரண்பாடே.


ஆனால், பின்னாளில் வெளியேறிய இரு கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் போக்குக் காரணமாகவே வெளியேறும் நிலை உரு வானது. இதனை வேறு விதமாகச் சொல்வ தானால் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டே கூட்டமைப்பு என்ற தத்துவத்துக்கு மாறாகச் செயற்பட்டு வந்திருக்கின் றது. பங்காளிக் கட்சிகள் வெளியேறுவ தற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கி வந்த அந்தக்கட்சி தற்போது தானே வெளியேறும் முடிவை எடுத்துள்ளது.


இதில் ஆச்சரியமான விடயம் தமிழ் ஊடகங்களினதும், தமிழ் ஊடகவியலாளர்களினதும் நிலைப்பாடு. ஒரு காலகட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட்டமைப்பை உருவாக்கிய ஊடகவியலாளர்கள் எங்கே போனார்கள் எனத்தெரிய வில்லை. கூட்டமைப்பின் உருவாக்கத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாது விட்டாலும், அது உருவாகிய காலப்பகுதியில் இருந்து அதன் வளர்ச்சியில் பங்களிப்பை வழங்கி வந்த ஊடகவியலாளர்களும் கூட இது விடயத்தில் மௌனமாகவே இருப்பதன் அர்த்தம் புரியவில்லை. ஒரு சிலரைத் தவிர, பலரும் தமிழரசுக் கட்சியின் பக்கமே நியாயம் இருப்பதாகக் கூறுவதன் காரணமும் புரியவில்லை. சரியாகச்சொல்வதானால், 2001செப்டெம்பரில் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான மாவை.சேனாதிராஜா அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதோ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கான ‘கரு’ உருவாகியது. தற்போது, அவர் தலைவராக விளங்கும் இலங்கை தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பின் சிதைவுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?


மாவை.சேனாதிராஜா போன்ற ஒற்றுமையை விரும்பும், போராட்ட இயக்கங்களின் தியாகங்களை மதிக்கும் தலைவர்கள் அன்று பலம்பெற்று இருந்ததினாலேயே கூட்டமைப்பின் உருவாக்கம் சாத்தியமா னது. அவர் போன்றவர்கள் பலம் இழந்த நிலையில் இருப்பதாலேயே கூட்டமைப்பின் சிதைவு சாத்தியமாகி இருக்கிறது.


தற்போது, இருப்பது போலவே அன்றும் தமிழரசுக் கட்சியினதும், அதன் தாய்க்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் ஒரு சில தலைவர்களிடம் ஒருவகை ‘மிதப்பு மனோநிலை’ இருந்தது. தமது கட்சி பாரம்பரியக்கட்சி, தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற ஜனநாயகக் கட்சி, குறிப்பாக ‘இரத்தக்கறை படியாத கரங்களைக் கொண்ட கட்சி’ என்பது அத்தகையோரின் நிலைப்பாடாக இருந்தது. இத்தகைய எண்ணம் தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைமையிடமும் இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் தமது ‘வழக்கமான பாணியில் விடயங்களை அணுகி இந்தக்கட்சிகளின் சம்மதத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது கூட்டமைப்பின் உருவாக்கத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்த என்போன்ற ஊடகவியலாளர்கள் நன்கு அறிந்த உண்மை.


தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் விடு தலைப் புலிகளின் உள்ளூர்த் தலைவர்கள் சிலர் இணைந்து முடிவுக்கு வர பலமான காரணங்கள் இருந்தன. 2001ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோனமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் வெற்றிபெற்றமை போன்றவை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே தமிழ்க் கட்சிகளின் கூட்டு ஒன்றுக்கான அவசியமாகக் கருதப்பட்டது.


கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதற்கான வாய்ப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் அதிகமுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டே கூட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு ஆதரவு திரட்டப்பட்டது. ஆனால், தற்போது தமிழரசுக் கட்சியின் வெளியேற்றத்துக்கும் விகிதாசாரப் பிரதி நிதித்துவ முறைமையையே காரணமாகச் சொல்வது எத்தகைய முரண் நகை?


அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் குரலாக விளங்கிய கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் போன்றவை தமிழ்க் கட்சிகளின் கூட்டு ஒன்றுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் தொடர்ந்து பல முன்னெடுப்புக்களைச் செய்தன, அத்தகைய நடவடிக்கைகளின்போது சகோதரப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலாகச் செயற்பட கூட்டமைப்பு அவசியமாக இருந்தது. செப்டெம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க அறிவித்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ உலகின் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளை உருவாக்கி இருந்தது.


அந்த நிலையில் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குரலாக, தமக்குச் சார்பானவர்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கும் உருவாகியது. அதனை விடுதலைப் புலிகள் உச்ச பட்சம் பயன்படுத்திக் கொண்டார்கள். காலத்தின் தேவையாக உருவாகிய கூட்டமைப்பின் அவசியம் தற்போது முன்னெப்போதையும் விடவும் அதிகமாக உள்ள நிலையில் அது உடைந்து போயிருப்பது வேதனை தரும் விடயம். குறிப்பாக, கூட்டமைப்பு உருவாகுவதற்கு முதன்மைக் காரணங்களாக விளங்கிய அபாயங்கள்(?) இன்னமும் அதே நிலையில் உள்ள நிலையில் இது நிகழ்ந்திருக்கின்றது. தேர்தலின் பங்காளிக்கட்சிகளுடன் இயங்குவோம் எனத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் அதற்கான வாய்ப்பில்லை என்பதைச் சிறுபிள்ளை கூட அறியும். அது மாத்திரமன்றி, தமது கட்சி வெளியே வந்துவிட்டால் கூட்டமைப்பு சிதைந்து போகும் வாய்ப்புள்ளது என்பதை நன்கு அறிந்திருந்த தமிழரசுக் கட்சி, தற்போதும் தாங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறுவது மிகப் பெரிய நகைச்சுவை. தமிழ்க்குடும்பங்களில் மணமுறிவு ஏற்பட்டுவிட்டால் முன்னாள் இணையர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதும், ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரி இறைப்பதும் இயல்பானது. கிட்டத்தட்ட இதுபோன்றே கூட்டமைப்பின் தமிழ்த் தேசியக் முன்னாள் பங்காளிக் கட்சிகள் நடந்து கொள்கின்றன. இது வெறும் மணமுறிவு அல்ல, மனமுறிவு. இதனை மீண்டும் சரி செய்வது சாத்தியமே இல்லை என்பதே உண்மை.

credit to:

Spread the love