இயற்கையின் அழிவும் மனிதனும்

பூமிக்கு நாளாந்தம் ஏற்படுத்தப்படும் அழிவுகள் சொல்லிமாளாதவை. ஐக்கிய நாடுகள் சபையும் இதன் தொண்டு நிறுவனங்களும் என்னதான் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் பரப்புரைகளை மேற்கொண்டாலும் இயற்கை அழிப்புக்கு திடமான முற்றுப்புள்ளியை வைத்துவிட முடியவில்லை என்பது ஆழ்ந்த கவலை தரும் விடயம்தான். பரிமாணம் அடைந்த மனிதனின் நாளாந்த நடவடிக்கைகளால் நிலக்கோளம், நீர்க்கோளம். வளிக் கோளம், உயிர்க்கோளம் என்பன பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதில் உயிர்க்கோளமானது உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, பரிணாமம் பெருக்கம் என்பவற்றுடன் சூழல் மாற்றங்களின் பிரதிபலிப்பாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மனிதர்களின் அலட்சியப்போக்குக் காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கின்றது. பூமி நலமாக இருந்தால் மட்டுமே நாம் சிறப்பாக வாழ முடியும். பூமி வெப்பமாதலுக்கு, காடுகள் அழிவடைவது மிக முக்கியமான காரணமாகும். தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இவ்வாறான பேரிடர்களைத் தவிர்க்க வேண்டுமாயின் பூமியை உரியமுறையில் பேணிப்பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.


இயற்கையைவிட்டு விலகுவதால்  பேரழிவில் மனித சமுகம்!

தற்போது மனித சமூகம் இயற்கையை விட்டு நெடுந்தூரம் விலகிவிட்டது. வருங்காலச் சந்ததியினரை கருத்திற்கொண்டு பூமியைக் காப்பாற்ற வேண்டும். நிலம், நீர், காற்று நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன்கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி நீர்வீழ்ச்சிகள், காடுகள். களனிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. வானம், பூமி, வளிமண்டலம். சூரியனின் ஒளி (வெப்பம்) சந்திரனின் குளிர்ச்சி, தரைவாழ் கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் அனைத்தும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை நடத்துவதற்கு அத்தனையும் தேவையானவை. இந்தச் சுற்றாடல்த் தொகுதி புவியின் சமநிலையைப் பேணி வருகின்றது. இந்தச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச் சூழல் மாசுபாடு, மழையின்மை,பூமி வெப்பமடைதல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றன.

இது மனித வாழ்வா தாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகத்துக்கே உணவளித்து, உயிர்காக்கும் ஆதி தொழிலான விவசாயமும், அது சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில்களும் அழிந்து வருகின்றன. அதனைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகில் ஒவ்வொருநாளும் 700க்கும் மேற்பட்ட சிறார்கள் இறக்கின்றனர். எதிர்வரும் 2040ஆம் ஆண்டுக்குள் ஒரு வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் குழந்தைகள் தீவிர மாசுகேடு உள்ள பிரதேசத்தில் வாழ்வார்கள்.

இயற்கை அழிப்பென்பது இல்லாதாக்கப்படவேண்டும்

நாகரிக வளர்ச்சியாலும், பொருளாதார தேவையின் பொருட்டும் மனிதன் கிராமத்தைவிட்டு இடம் பெயர்ந்து நகரப்பகுதிக்கு வந்தான். காலமாற்றத்திலும், குடும்பர் சூழலிலும் இயற்கையுடனான அவனது உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒரு தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கையைச் சிதைத்தல் தடுக்கப்படவேண்டும். இயந்திரமயமாதலும், புகையும், இரைச்சலும் சிட்டுக்குருவிகள், பூச்சிகளை மட்டுமல்ல நம்மையும் பாதித்து வருகின்றன. உலகம் பூராகவும் உள்ள மழைக்காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக்குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக்காடுகளின் நிலைத்திருத்தலில் வகிக்கும் பங்கு பிரதானமானது, ஏராளமான இரகசியங்களை பொத்தி வைத்திருக்கும் மழைக் காட்டின் ‘சாவி’ காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கையிலேயே தான் இருக்கிறது.

பல நூற்றாண்டுகாலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக் காட்டுத் தாவர, விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாய்லாந்து ‘லுஆ’ பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப்பயிர் வகைகளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகிறார்கள் என்றால் உலகம் முழுவதும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய மரபணு வளங்களைக் கற்பனை செய்ய இயலாது.

ஆனால், இவ்வளவு இருந்தும் மழைக் காடுகள் படிப்படியாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் மனிதன்  படிப்படியாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் 5 சதவீதம் எனக் கூறும் அளவுக்குக் குறுகிப் போயிருக்கிறது. இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர, விலங்கின வகைகளும் ஈடுசெய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாகப் பூமி சந்தித்த கோரப் புயல்களும் இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றவையுமே, அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச் சமநிலை குலைவுகள்தான் ஏற்படுகின்றன. திட்டமிடாத காடழிப்பு, மண்ணகழ்வு, விவசாயத்தில் அளவுக்கதிகமாக நச்சுத்திரவத்தைப் பயன்படுத்தல். இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்தல், தொழிற்சாலைக் கழிவுகளையும், வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆகிய செயற்பாடுகளால் சூழல் மாசடைகிறது. மனிதன் சூழலைப் பாதுகாப்பதில் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம். இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாகப் பதியவேண்டும். சுருங்கச் சொல்வதாயின் இயற்கையின் இருப்புத்தான் எமது இருப்பு.

Spread the love