வீழ்ச்சியடைந்துள்ள செல்வாக்கினை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள ராஜபக்சக்கள் முயற்சி

தென்னிலங்கையில் மக்கள் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ள செல்வாக்கினை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள ராஜபக்சக்கள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் தப்பியோடியுள்ள கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் மக்களின் அனுதாபங்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை வரும் கோட்டாபய

இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பின்னர் மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்து சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கு சில வாரங்களை கழித்த நிலையில் நாடு திரும்பவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

வரவேற்பு நிகழ்வு

கோட்டாபயவின் வருகை - தென்னிலங்கையில் ராஜபக்சர்கள் போடும் திட்டம் | Gotabaya Rajapaksa Escape Sri Lanka

கடந்த 24ஆம் திகதி  கோட்டாபய இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய அது பிற்போடப்பட்டது.

கோட்டாபய நாடு திரும்பும் போது மகத்தான வரவேற்பு நிகழ்வு ஒன்றை பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்திருந்தது. எனினும் கோட்டாபய வரும் போது அவ்வாறான எந்த வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிலின் அரசியல் திட்டம்

கோட்டாபய நாடு திரும்பியதும் அவரை இலக்காக கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக தேசிய பட்டியல் ஊடாக அவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னெடுத்து வருகிறார். 

அதனை தொடர்ந்து மக்களுக்காக ஜனாதிபதி பதவியை கோட்டாபய துறந்தார் என்ற கோசத்துடன் அனுதாபத்தை பெறும் வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Spread the love