போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினர் இந்தியா வருவதற்குத் தடைவிதிக்க வேண்டும்

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினர் இந்தியா வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்கள் 19 பேரைப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் மன்னிக்கப்பட்ட சிங்கள இராணுவ அதிகாரிகள் சந்தன ஹெட்டியாராட்சி, சுனில் ரத்நாயக்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கின்றது, பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கின்றது என்பதற்கு அதுதான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாகச் செய்திருக்கின்றது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். அது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவுக்குள் நுழையத்தடை விதிக்கப்படவேண்டும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love