ரஷ்ய விமானம் மீதான தடை உத்தரவு நிறுத்தம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ‘ஏரோஃப்ளொட்’ விமானம் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது. வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியேற தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை இரத்துச் செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளது மற்றும் சட்டரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த பிரேரணையில் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம், இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சட்டதகராறு தொடர்பாக வணிக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில் ஏரோஃப்ளோட் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவது நிறுத்தப்பட்டது. விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் நடவடிக்கைக்கு ரஷ்ய அதிகாரிகள் கடும் அதிர்ப்தியை வெளியிட்டிருந்தனர்.

மொஸ்கோவிலுள்ள ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான வர்த்தக விமான சேவைகளை நிறுத்துவதாக ஏரோஃப்ளோட் நிறுவனமும் அறிவித்தது. எனினும் இப்பிரச்சினையானது, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சினை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்திருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மூன்று நாட்களாக விமானம் தரையிறக்கப்படாமையினால் இலங்கையை விட்டு வெளியேற முடியாமல் இருந்த 275 ரஷ்ய பிரஜைகள் நேற்று முன்தினம் விசேட விமானம் மூலம் ரஷ்யாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர்.

Spread the love