பீபா(FIFA)விடம் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற 30 கோடி ரூபா நிதி கோரிக்கை 

இலங்கை கால்பந்தாட்டத்தில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் 30 கோடி ரூபாவுக்கான செலவு மதீப்பீடு ஆவணமொன்றை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பிடம் (பீபா) முன்வைத்துள்ளது. இதன்படி, நாட்டில் காணப்படும் நான்கு கால்பந்தாட்ட மைதானங்களை புனர்நிர்மாணம் செய்து நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு சிட்டி லீக் கால்பந்தாட்ட மைதானம், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம், களனியிலுள்ள கால்பந்தாட்ட அபிவிருத்தி மத்திய நிலைய கால்பந்தாட்ட மைதானம் மற்றும் மாத்தறை தேசிய கால்பந்தாட்ட அபிவிருத்தி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களை கிடைக்கப்பெறும் நிதியின் ஊடாக நவீனமயப்படுத்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது. இலங்கையில் கால்பந்தாட்டத்தின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்காக பீபாவிடம் முன்வைக்கப்பட்ட செலவு மதிப்பீட்டு ஆவணத்திற்கு சிறந்த பதில் கிடைத்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்தார். நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டு எதிர்கொண்டுள்ள நிலை தொடர்பாக விசாரித்ததுடன், இலங்கை கால்பந்தாட்டத்திற்கு அளிக்கப்பட்டுவரும் நிதியை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துவதாகவும் பீபா தலைவர் கியானி இன்பென்டினோ தன்னிடம் உறுதியளித்ததாக ஜஸ்வர் உமர் குறிப்பிட்டிருந்தார்.

Spread the love