ஐ.சி.சி.யின் பண்பாளருக்கான விருது டேரில் மிட்செலுக்கு

ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான விருதினை நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேரில் மிட்செல் பெற்றுள்ளார். அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் 2021 ஐ.சி.சி. ஆடவர் டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.


முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மொயீன் அலியின் அரைசதத்தால் 4 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை குவித்தது. வெற்றி இலக்குக்கான துரத்தலில் டேரில் மிட்செல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைப்பாட்டத்தை நிறுவி துடுப்பெடுத்தாடும் போது, அடில் ரஷித் வீசிய 18 ஆவது ஓவரில் நடந்த சம்பவத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 18 ஆவது ஓவரின் முதல் பந்தினை எதிர்கொண்ட ஜேம்ஸ் நீஷம் அடித்து ஆடினார். அந்த பந்தினை பந்து வீச்சாளர் ரஷித் தடுக்க முற்படுகையில் மறுபக்கம் கிறிஸ் கோட்டுக்குள் இருந்த டேரில் மிட்செலுடன் எதிர்பாராத விதமாக மோதுண்டார். இதனால் பந்தினை ரஷித்தால் தடுக்க முடியவில்லை , அது நேராக லோங் திசை நோக்கி சென்றது. இந்த தருணத்தில் ஜேம்ஸ் நீஷம் ஒரு ஓட்டம் பெற்றுக் கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். எனினும் அந்த ஓட்டத்தை எடுக்க மறுத்தமைக்காக டேரில் மிட்செலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வென்ற நான்காவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மிட்செல் பெற்றுள்ளார். டேனியல் வெட்டோரி, பிரெண்டன் மெக்கலம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் இதற்கு முன்னர் இந்த விருதினை பெற்றுள்ள நியூஸிலாந்து வீரர்கள் ஆவர்.

Spread the love