வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று புதிய வாக்குறுதி

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாவலப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைகையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கைக்கு கிடைத்த அனைத்து வருமானங்களும் இல்லாமல் போயுள்ளதாகவும், மில்லியன் தொகையான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருமானம் இல்லாமல் போயுள்ளதால், அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கப்பல் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். இதனால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், நாட்டு மக்களினால் வாழமுடியாது போயுள்ளது என்பதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை தாம் ஐந்து வருடங்களுக்கு பொறுப்பேற்றுள்ள போதிலும், இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, கடந்த இரண்டு வருடங்களில் நிறைவேற்ற முடியாமல் போன அனைத்து வாக்குறுதிகளையும் எதிர்வரும் மூன்று வருடங்களில் கட்டாயம் நிறைவேற்றுவோமென உறுதியாக கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love