பிரதமர் முதலமைச்சர் சந்திப்பு : திட்டமிட்டபடி ஏப்ரல் 1ல் சாத்தியம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 1ம்திகதி அதாவது ஏப்ரல் 1ம்திகதி டெல்லியில் திமுக அலுவலக கட்டடத்திறப்பு விழாவில் பங்கேற்றபின் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று முதல்வர் அலுவலகச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன் முறையாக 5 நாள் வெளிநாட்டு பயணமாக கடந்த வியாழக்கிளமை துபாய் சென்றார். அங்கு அவர் தமிழகத்திற்கு எவ்விதம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களோடு ஆலோசனைகளை மேற்கொண்டார். 

இதைத்தொடர்ந்து அமீரகம் வாழ் இந்தியத் தமிழர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார். துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அவர் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிற்பாடாக டெல்லியில் திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி செல்லுவார் எனவும் தெரியவருகிறது. அவ்விதம் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார் எனவும் அதில் , கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது மற்றும், நீட் விவகாரம், ஜி.எஸ்.டி நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகமான கலைஞர் – அண்ணா அறிவாலயத்தை திறந்துவைக்க உள்ளார். அக்குறித்த  விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மத்திய பாஜக அரசை திமுக கடுமையாக விமர்சித்து வந்தாலும் கூட திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர் . இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இம்முக்கிய அழைப்பு விடயமானது  தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பேசப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. 

Spread the love