பிம்ஸ்டெக் கூட்டத்தில் “சர்வதேச அரசியலில் இன்று முக்கிய இடத்தை பிடித்த வங்காள விரிகுடா- கொலம்பகே புகழாரம்

பிம்ஸ்டெக் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வங்காள விரிகுடா நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கை வெளியுறதுத்துறைச்செயலர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே வங்காள விரிகுடாவின் நாடுகளின் சர்வதேச அரசியல் முக்கியத்துவம் பற்றிப்பேசினார்.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் நேற்று, 2022 மார்ச் 28ஆந் திகதி இலங்கையின் தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தனது ஆரம்ப உரையில், பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தின் காரணமாக வங்காள விரிகுடா சர்வதேச அரசியலில் இன்று முக்கிய இடத்தை பிடித்துள்ளது எனக் குறிப்பிட்டார். வங்காள விரிகுடாவின் பண்டைய வர்த்தக இணைப்புக்கள் பிம்ஸ்டெக்கின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மற்றும் இஸ்லாம் உட்பட உலகின் அனைத்து பெரிய மதங்களாலும் ஈர்க்கப்பட்ட ஒரு பொதுவான கலாச்சார நெறிமுறைகளை இப்பகுதி பகிர்ந்து கொள்கின்றது என்றும், பிம்ஸ்டெக் நாடுகளில் உள்ள நாகரிகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, இந்தக்குழு நன்கு இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, இயற்கையாகவே அவை பங்காளிகளாக இருக்கின்றமையினால், இது ஓர் கோப்புள்ள அமைப்பாக உருப்பெற்று இன்று பிம்ஸ்டெக்கின் இருப்பானது இன்று 25 ஆண்டுகளின் பின் செழித்து விரிவடைந்துள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக  ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு முன்னெப்போதையும் விட  பலமடங்கு பின்னடைவுக்கு முக்கியமாக வழிவகுத்தது என்பதனை வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே சுட்டிக்காட்டினார். இதனால் பிம்ஸ்டெக் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றுநோய் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, பிம்ஸ்டெக் பிராந்தியமானது ஒப்பீட்டளவில் மீள் சுழற்சித்தன்மையுடன் உள்ளதன் காரணமாகவும்  அதன் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் மீளெழத்தக்கதாகவும்  நம்பிக்கைக்குரியதாகவும் காணப்பட்டது என்றும்   அவர் மேலும் குறிப்பிட்டார். புதிய அபிவிருத்தி முறைகளுக்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வதுடன் , இந்தப் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் பிம்ஸ்டெக் ஒன்றுபடவேண்டும் எனவும்  அழைப்பு விடுத்தார்.

பிம்ஸ்டெக் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் அங்கு  கலந்துரையாடப்பட்டது. 2022 மார்ச் 29ஆந் திகதி நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தை எளிதாக்கும் வகையில் கலந்துரையாடல்கள் வழிநடத்தப்பட்டன. கூட்டத்தின் நிறைவில், எதிர்வரும் பீம்ஸ்டெக் கின்  தலைவராக வருவதற்காக  தாய்லாந்திடம் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஒப்படைத்தது.

Spread the love