பாதுகாப்பு கண்காட்சியான DefExpo 2022ல் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள பிரமித்த பண்டார

இலங்கை  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்கள் தலைமையில் கடற்படை மற்றும் இராணுவத்தைச்சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட மூவரடங்கிய பேராளர்கள், இரு வருடங்களுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் உலக பாதுகாப்பு கண்காட்சியான  DefExpo 2022ல் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இக்கண்காட்சியானது குஜராத்தில் உள்ள காந்திநகரில் 2022 ஒக்டோபர் 19ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பங்கேற்கும்  இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஒக்டோபரில் குஷிநகர் விமான நிலையத்துக்கான சர்வதேச விமான சேவையின் அங்குரார்ப்பணம் இடம்பெற்றபோது இலங்கையைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்ளப்படவேண்டும்.

2.     DefExpo 2022 கண்காட்சியில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்கள் பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பினை பாராட்டியதுடன் பாதுகாப்பு கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதில் பாதுகாப்புசார் உற்பத்தித் துறையின் முக்கியத்துவத்தினையும் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், ஐந்து பரிமாணங்கள் ஊடாக நவீன போர் முனைகளில் காணப்படும் மாற்றங்களின் தன்மைகள் குறித்த ஆழமான புரிந்துணர்வை எட்டுவதற்கு இக்கண்காட்சி முக்கியமான வாய்ப்பினை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

3.    ‘Make in India” மற்றும் “Make for the World’ போன்ற திட்டங்கள் ஊடான இலக்குகளையும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவினையும் அடைவதற்கு இந்திய பாதுகாப்புத்துறைசார் உற்பத்தித் துறையின் வளர்ந்துவரும் செயல்திறனை இக்கண்காட்சி வெளிக்காட்டுகிறது. இக்கண்காட்சியின் அங்கமாக ஆயுதப் படையினர், பொது பாதுகாப்பு பிரிவு மற்றும் உற்பத்தித்துறை ஆகியவற்றின் தொழில்திறன்களையும்  சாதனங்களையும் காண்பிக்கும் நேரடி செய்முறை விளக்கங்களும் இங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

 4.   பாதுகாப்பு சார் கண்காட்சி 2022இன் பக்க நிகழ்வாக 2022 அக்டோபர் 17ஆம் திகதி இந்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஶ்ரீ அஜய் பட் அவர்களை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராளர்கள் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின்போது பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு இந்தியா எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகளுடனும் இலங்கை பேராளர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 5.   பாதுகாப்பு துறையில் காணப்படும் இருதரப்பு ஈடுபாடானது இயல்பாகவே பல்வேறு பரிமாணங்களை கொண்டிருக்கின்ற விடயமாகும். Covid-19 காரணமாக பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் இருதரப்பினர் இடையிலான உயர்மட்ட பரிமாற்றங்களும் பயிற்சிகளும் தொடர்ந்தும் நடைபெற்றிருந்தன. SLINEX கடற்படை பயிற்சி மற்றும் MITRA SHAKTI இராணுவ பயிற்சி ஆகியவை இந்தியாவிலும் இலங்கையிலுமாக  ஒவ்வொருவருடமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளினதும் ஆயுதப் படையினர் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர். பிராந்திய மட்டத்தில் இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு கொழும்பு பாதுகாப்பு கூட்டுக் குழுமத்தின் வகிபாகம் மிகவும் முக்கியமான ஒன்றாக அண்மைக்காலங்களில் மாற்றமடைந்துள்ளது. அத்துடன், இலங்கையின் கடல் கண்காணிப்பு திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் முதற்தடவையாக டோனியர் விமானமொன்று இந்தியாவால் இலங்கைக்கு வழஙகப்பட்டு 2022 ஆகஸ்ட் 15ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உயர்வான பிரசன்னத்துடன் இலங்கை விமானப்படையின் சேவையில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க  விடயமாகும்.

5.    இருநாடுகளினதும் பொதுவான பாதுகாப்பினை மேம்படுத்துவதில் பரஸ்பர நலன் மற்றும் சிறந்த தோழமை ஆகியவற்றால் வலுவூட்டப்பட்ட இந்திய இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில் அனுபவப் பகிர்வு மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகள் மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருகின்றன. தேசிய பாதுகாப்பு கல்லூரி உட்பட பல்வேறு இந்திய இராணுவ நிறுவனங்கள் கடந்த பல தசாப்த காலமாக இலங்கை ஆயுதப் படையினரின் முன்னுரிமை தெரிவாக உள்ள அதேசமயம் இவற்றின்மூலம் இலங்கை ஆயுத படைகளின் தலைமை அதிகாரிகள் பலர்  உருவாக்கப்பட்டிருந்தனர். வருடாந்தம் 1500 முதல் 1700 இடஒதுக்கீடுகள் இலங்கையைச்சேர்ந்த பயிலுனர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. இவை கிட்டத்தட்ட 500 முதல் 550 மில்லியன் இந்திய ரூபா (ஆறு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதி) பெறுமதியினைக் கொண்டுள்ளது.  இதேபோல கிளர்ச்சிகளை முறியடித்தல் போன்ற பல்வேறு விடயங்களுக்கான விசேட பயிற்சி திட்டங்கள் உள்ளிட பயிற்சிகளுக்காக இந்திய படையினரும் இலங்கை ஆயுதப் படையினரால் வரவேற்கப்படுகின்றனர்.

 8.   சுற்றுச்சூழல் அனர்த்தங்களைத் தவிர்த்தல், திரவநிலை மருத்துவ ஒட்சிசன் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை துரிதமாக வழங்குதல், 700 இந்தியர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தமை உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான அடிப்படையிலான ஒத்துழைப்பு செயற்பாடுகளும் கொவிட்-19 பெருநோய் காலப்பகுதியில் இலங்கை ஆயுதப் படைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

  8.  இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பானது இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றினை சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. பிராந்திய சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றினை மேம்படுத்துவதற்காகவும் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலும் இலங்கையுடனான பல்பரிமாண ஒத்துழைப்பினை இந்தியா தொடர்ந்தும் வலுப்படுத்தும்.

Spread the love