நெருக்கடியை வெற்றி கொள்ள உதவ சமந்தா பவர் பிரதமர் ரணிலுக்கு உறுதி

நிதி நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்க அபிவிருத்தி முகவரமைப்பு ஐ.யு.எஸ்.எய்ட் உறுதியளித்திருப்பதுடன், இலங்கை மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு ஐ.யு.எஸ் எய்ட் நிர்வாகியான சமந்தா பவர், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு யு.எஸ்.எய்ட் எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்து பிரதமர் விக்கிரமசிங்கவுடன் திங்களன்று, தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் அரசியல் அமைதியின்மையால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த இலங்கையர்களுக்கு நிர்வாகி பவர் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன் இலங்கை மக்களுக்கு தனது ஆதரவளிப்பது தொடர்பாக உறுதியளித்துள்ளார் அத்துடன் யு எஸ் எய்ட் நாட்டின் நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் இலங்கை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்று யு எஸ் எய்ட்டின் செய்தித்தொடர்பாளர் ரெபேக்காசாலிவ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ள பொருளாதார அதிர்ச்சிகளை அனுபவிக்கும் இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு யுஎஸ் எய்ட் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னிலைப்படுத்துகின்றது, சாலிவ் மேலும் கூறியுள்ளார் இந்த அசாதாரணமான நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கைக்கு ஆதரவாக, நாணயநிதியம் உலக வங்கி, ஜி7 மற்றும் ஏனைய நன்கொடையாளர்களுடன் யு எஸ் எய்ட் நெருக்கமாகப் பணியாற்றும் என்று பவர் பிரதமருக்கு உறுதியளித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிசைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. அதே நேரத்தில் மின்வெட்டு மற்றும் உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.

Spread the love