துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு பெல்ஜிய தூதுவர் இணக்கம்

இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு பெல்ஜிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெல்ஜிய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் எனவும் குறித்த தொழில்நுட்பங்களை கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தேவையான ஒத்துழைப்பை வழங்க விரும்புவதாகவும் பெல்ஜிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பெல்ஜிய முதலீட்டாளர்களால் நடத்தப்படும் படகுத் துறையில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இதன்போது இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love