ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகதவ இல்லம் அமைந்துள்ள நுகேகொடை -மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் நேற்றிரவு பெருமளவான மக்கள் திடிரென களமிறங்கி ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு வேலிகளை தகர்த்து ஜனாதிபதியின் இல்லம் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.


ஆத்திரமடைந்த மக்களால் முதல் பொலிஸ் பாதுகாப்பு வேலி உடைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது அதிரடிப் படைபாதுகாப்பு வேலி, இராணுவம் விசேட படையணி பாதுகாப்பு வேலிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். ‘ இவற்றுக்கு மேலதிகமாக கலகமடக்கும் படையினர், விசேட அதிரடிப்படையினர் கையில் கொட்டன்களுடன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் நேற்றிரவு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆத்திரமடைந்த மக்கள் ஜனாதிபதி இல்லத்தை நோக்கி முன்னேறிய நிலையில் அங்கிருந்து பாதுகாப்பாக ஜனாதிபதி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, வரலாற்றில் இல்லாத மின்வெட்டு, அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையால் ஆத்திரமடைந்திருந்த மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நாடும், நாட்டு மக்களும் தற்போது எதிர்கொண்டுவரும் மிக மோசமான நிலைக்கு ஜனாதிபதியும், தற்போதைய அரசுமே காரணம் எனக்கூறி, கோஷங்களை எழுப்பியவாறு நள்ளிரவைத் தாண்டியும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் இன்று அதிகாலை வரை கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது. இதேவேளை, மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு 9 மணிக்குப் பின்னர் பல இடங்களில் இணைய வசதிகள் முடங்கியதாக பல்வேறு தரப்பினரும் முறைப்பாடுகளை செய்துள்ளனர். அதேநேரம் மின்தடை முன்னறிவிக்கப்பட்ட நேரத்தையும் விட ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

Spread the love