சிரியாவின் முக்கிய துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் பெரும்பாலான பொருட்களின் இறக்குமதிகள் நடைபெறும் மிக முக்கியமான துறை முகத்தில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் கடுமையான உள்நாட்டு போர் இடம் பெறுகின்றது. அங்கு அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கடற்கரை நகரமான லதாகியாவிலுள்ள துறைமுகம் மீது, நேற்று அதிகாலை இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளன.

துறைமுகத்திலுள்ள கொள்கலன்கள் பகுதியில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில், அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து நாசமானதாக, சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், துறைமுகத்தில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், கொள்கலன்கள் பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்ததாகவும், அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றதாகவும், சிரியா அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
லதாகியா துறைமுகத்தில் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை . அங்கு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் லதாகியா துறைமுகத்திலேயே நடந்து வருகின்றது. இந்த நிலையில், அந்நாட்டின் மிக முக்கியமான துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love