விபத்தில் பலியான இந்திய முப்படைத் தளபதியின் அண்மைக்கால முக்கிய பேச்சுக்கள் !

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு நேற்று(8/12/2021) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ஹெலிகாப்டர் கிளம்பிய அரை மணிநேரத்திலேயே மோசமான வானிலை காரணமாக குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பா சத்திரம் என்ற இடத்தில் மரத்தின் மீது விபத்துக்குள்ளானது. விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியாகி விட்டனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ராவத்தின் சமீபத்திய பேச்சுகள்


இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் சமீபத்திய பேச்சுகள்வெளியாகி உள்ளன. அதில் சீனா அச்சுறுத்தல், தலிபான்களுக்கு எச்சரிக்கை மற்றும் சைபர் தாக்குதல் குறித்த பிபின் ரவாத்தின் பேசசுகள் குறிப்பிடத்தக்கவை.

சீனா அச்சுறுத்தல்
இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானை விட சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இமயமலை பகுதிகளில் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட வீரர்களால் இன்னும் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கு நம்பிக்கையின்மை, சந்தேகம் அதிகரித்தல் போன்றவை தடையாக உள்ளன.
–Nov, 12, 2021

தலிபானுக்கு எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத குழுக்களுக்கு தலிபான்கள் உதவலாம் எனத் தெரிகிறது. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ராணுவத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல் நடத்தப்பட்டால், அது இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்.
–Nov., 12, 2021

‘சைபர்’ தாக்குதல்
சீனாவில், புதிய தொழில்நுட்பங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சைபர் தொழில்நுட்பத்தில் சீனா இந்தியாவை விட சற்று முன்னணியில் இருப்பது உண்மை தான். நம் நாட்டின் மீது சைபர் தாக்குதல் நடத்தும் வல்லமை சீனாவுக்கு உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம்.
–Apr., 8, 2021

சீனாவுடன் போர்
கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலையடுத்து இரு நாட்டு படைகளும் எல்லையில் தளவாடங்களையும், துருப்புகளையும் குவித்து வருகின்றன. இருநாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இப்பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால் சீனாவுடன் போர் புரிய இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

–Aug., 24, 2020

Spread the love