கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தம் வகிக்க ஜப்பான் உடன்பட்டது

ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற எமக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளுடன் பொது உடன்பாட்டுக்கு வர எதிர்பார்க்கிறோம். கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி. கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை ஏற்குமாறு ஜப்பானிடம் கோரவுள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில், கடந்த சில வாரங்களில் இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது உலகத் தலைவர்கள் பலரை சந்தித்து கருத்துப் பரிமாறசந்தர்ப்பம் கிடைத்தது. பிலிபைன்ஸில் நடந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்தில் அதன் அங்கத்துவ நாடுகளின் நிதி அமைச்சர்களை சந்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா உடனும் பேச்சு நடத்தினேன். இரு நாடுகளுடனும் தொடர்புள்ள பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடனும் கலந்துரையாடினேன்.கடன் மறு சீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி என்றார்.

Spread the love