இலங்கை மக்களை இந்தியா ஒருபோதும் மறக்காது

இலங்கை மக்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என இலங்கைக்கான இந்தியத்தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா மலையக பாரம்பரிய கலை. கலாசார நிகழ்வுகளுடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மலையக மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்று முக்கியதுவம் மிக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நோர்வூட் மைதானத்துக்கு வந்தது வரலாற்று முக்கியதுவமிக்கது. அன்று பிரதமர் மோடிக்கு நீங்கள் கொடுத்த அன்பு, பாசம் என்பவை முக்கியமானவை. அதற்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். தாய் தன் பிள்ளையை ஒருபோதும் மறப்பதில்லை அல்லவா? அதேபோன்றுதான் தாயான இந்தியா தனது பிள்ளைகளை ஒருபோதும் மறக்காது.

மலையக அபிவிருத்திக்காக தொடர்ந்தும் இந்தியா அதித சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றது. முக்கியமாக நான்காவது கட்டத்தில் பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தை மலையகத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். மலையகத்தின் கல்வித்துறையிலும் இந்தியா அக்கறையுடன் செயற்படுகின்றது. மலையக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்தியா வழங்குகின்றமை இதன் ஒரு பகுதியாகும். இதன்மூலம் சிறந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உறவின் உன்னதத்தைக் கூறும் தைப்பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி – என்றார்

Spread the love