துறைமுகங்கள் கடல் வளம்சார் திட்டங்களுக்கு இந்திய அமைச்சர் ஒப்புதல் 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது.

பருத்தித்துறைத் துறைமுகம், உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படும் முக்கிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதும் அபிவிருத்தி செய்வதும் சம்பந்தமாக இந்தியதரப்பு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளினோடு அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் எவை? என்பது தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய இலங்கைக்கடற் பிரவேசமும் மேலும் அவர்களது சட்டவிரோத தொழில் முறைப்பயன்பாடு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதும் அவற்றை எவ்விதம் கட்டுப்படுத்துவது என்பதும் அவற்றுக்குமான மாற்று முறை நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் இலங்கை இந்திய இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு சந்திப்பொன்றை கச்சதீவில் ஏற்பாடு செய்தது சம்பந்தமாகவும் இரு அமைச்சர்களும் பரிமாறிக்கொண்டனர். அதன்பின் அண்மைய அமைச்சர்களின் கலந்துரையாடலும் இந்திய இலங்கை உறவுக்கு பயனுள்ள சந்திப்பாக அமைந்தது என்பதையும் அமைச்சர் டக்ளஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எடுத்தியம்பினார்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளை  வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்வதன் மூலமாக எதைக்குறித்து பேசுகின்றோமோ அதற்கான தீர்வு அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நீண்ட நிலைத்திருக்க்கூடிய முடிவுகளை எடுக்கமுடியுமென இரு நாட்டு அமைச்சர்களும் ஒருசேர நம்பிக்கை வெளியிட்டனர்.

வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களின் மொத்தவடிவத்தின் தொகுப்பாக சில வேண்டுகோள்களினை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன் வைத்தார் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர், அவ்விதம்  கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பான சுமார் 23 கோரிக்கைளையும் அவர் முன்வைத்தார்.

அதன்படி
1.காங்கேசன் துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்தினை ஆரம்பித்தல்


2.வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் பெறுமதியான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் வழங்குதல்.

3.காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை ஆரம்பித்தல்

4.பலாலிக்கும்  – திருச்சிக்கும்  இடையிலான விமானப் போக்குவரத்து சேவை,

5.காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற பல கோரிக்கைகள் இதன்போது இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Spread the love