இந்திய மீனவர்கள் 08 பேர் விளக்கமறியலில்

கிளிநொச்சி – இரணைதீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 08 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் மீனவர்கள் நேற்று (27) பிற்பகல் 2.45 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளால் மன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது மீனவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், இரணைதீவு கடற்பரப்பில் குறித்த 08 இந்திய மீனவர்களும் அவர்கள் பயணித்த படகுடன் கடற்படையினரால் (26.02.2022) அன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 16 வயது சிறுவன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இராமேஷ்வரம் – தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 51 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் 10 படகுகளும் இம்மாதத்திற்குள் மாத்திரம் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களுடன் அவர்களது படகுகளையும் விடுவித்துக் கொள்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராமேஷ்வரம் மீனவ சங்கத்தலைவர் எமரிட் கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love