இத்திய படகு ஏலத்தை தடுக்க ஸ்டாலின் கோரிக்கை

இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதை தடுக்குமாறு இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களது 105 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி வைத்துள்ளது.

அந்த படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்போவதாக கடந்த 23 ஆம் திகதி இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையிலேயே ஸ்டாலின் இந்த கோரிக்கையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரிடம் முன்வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது இந்தியா இலங்கை மீனவ ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் சந்திப்புகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் துரதிஷ்டமானதாக அமையும் என கடித்தல் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இலங்கை அரசுக்கு படகுகளை ஏலத்தில் விற்பதற்கான சட்ட ரீதியான அதிகாரமில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், 125 படகுகள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டவை என்பதனையும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படகுகளை மீண்டும் தமிழ் நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான தொழில்நுப்ட குழுவினை இலங்கைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், வேறுபட்ட துறைமுகங்களில் காணப்படும் படகுகளை கொண்டுசெல்வதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவது தொடர்பிலும் பேச அந்த குழு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு இலங்கை கடற்படை 125 படகுகளை விடுவிக்க அனுமதி வழங்கியுள்ளமையையும் ஸ்டாலின் தனது மத்திய அரசுக்கு அறிவித்துள்ளார். அத்தோடு அண்மையில் இலங்கை மீனவர்களினால், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதனையும், 300 kg மீன்கள், தொழில்நுட்ப கருவிகள், 30 லீட்டர் டீசல் போன்றன திருடப்பட்டமையினையும், தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதனையும் கடிதத்தில் ஸ்டாலின் சுட்டி காட்டியுள்ளார்.

பெப்ரவரி 07 ஆம் திகதி முதல், 11 ஆம் திகதி வரை கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

Spread the love