இந்திய படகு ஏலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸின்  கருத்து

இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தை  தெரிவித்துள்ளார்.

“இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால், சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே அவை ஏலத்தில் விடப்படுகின்றன” என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்ராலின், சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில் கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங்களை  கொண்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ள போதும்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படகு ஏலத்தை தடுத்து நிறுத்துமாறும், இலங்கைக்கு படகுகளை ஏலமிட சட்ட ரீதியான அதிகாரம் இலங்கைக்கு இல்லையெனவும் தெரிவித்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

Spread the love