அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாகவும் நேர்மையாகவும் பொது அல்லது சமூக செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் உறுப்பினர், பிரதமர் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் 02 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சியின் உறுப்பினர் மற்றும் சிவில் உறுப்பினர்கள் 3 பேர் அடங்களாக அரசியலமைப்பு பேரவையில் 10 பேர் அங்கம் வகிக்கவுள்ளனர்.

21ஆவது திருத்தத்திற்கு அமைவாக, பிரதம நீதியரசர் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள், சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஒம்புட்ஸ்மன், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே நியமிக்கப்படல் வேண்டும். இதேவேளை, பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்ட 17 துறைசார் கண்காணிப்பு செயற்குழுக்களுக்கான தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Spread the love