அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கிற்கு சவால் விடுக்கும் புடின்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகம் கிழக்கு மற்றும் மேற்கு என இரு துருவங்களாக, தொகுதிகளாகப் பிரிந்தது. கிழக்கு பெர்லின் சோவியத் சோசலிஸ்ட் குடியரசின் (USSR) ஆட்சியின் கீழ் வந்தது. மேற்கு பெர்லின் அமெரிக்காவின் ஆட்சியின் கீழ் வந்ததுடன் உலகில் அரசியல் பனிப்போர் ஆரம்பமாகியது. சில நாடுகள் அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகள் சோவியத் தொகுதியிலும் இணைந்துகொண்டன.

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து நேட்டோ NATO (North Atlantic Treaty Organization) வையும் மற்றும் யுஎஸ்எஸ்ஆர் (USSR -Union of Soviet Socialist Republics) மற்றும் அதன் கூட்டாளிகள் வார்சாவை WARSAW (WARSAW Treaty Organization) உருவாக்கினர். WRASAW ஒப்பந்தம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவுடன் கலைக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் நேட்டோ உலகின் மிகப்பெரிய, பலம் மிக்க இராணுவ கூட்டணியாகத் திகழ்கின்றது.

பனிப்போரின் முடிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் உடைவுடன் புதிய உலக ஒழுங்கு நடைமுறைக்கு வந்தது. உலகம் ஒரு துருவமாக (ஒற்றைத் துருவ உலக ஒழுங்கு) மாறியதுடன் அமெரிக்கா புதிய உலக ஒழுங்கின் தலைவனாகவும், உலகின் ஒரே வல்லரசாகவும் ஆனது. ஆனால் 2001 இல், 9/11(அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதல்) சம்பவம் உலகின் ஒட்டுமொத்த சூழலையும் அடியோடு மாற்றிவிட்டது.

தனது நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அதன் குடிமக்களை அச்சுறுத்தும் எவரையும், எங்கும், எப்படியும் இலக்கு வைப்பதாக அறிவித்து பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரைத் தொடங்கியது அமெரிக்கா. இந்த கொள்கையின் கீழ் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு குழுவில் (UNSC) உள்ள நாடுகளின் எதிர்ப்பு எதுவுமின்றி ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாமீது படையெடுத்ததுடன் சிரியாவில் பயங்கரவாதிகளின்(Daesh/ ISIS) மீது தாக்குதலையும் நடாத்தியது.

கடந்த 30 வருடங்களாக எந்த பெரிய வல்லரசுகளுக்கிடையிலும் போர் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் முக்கிய விடயங்களில் இராஜதந்திர ரீதியிலான முறுகல்களை நாம் கண்டிருந்தாலும், அவர்கள் ஒருபோதும் போரையோ அல்லது உக்ரைனின் தற்போதைய நிலைமை போன்ற ஒரு சூழ்நிலையையோ சிறிதும் நெருங்கவில்லை.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது, ஜனாதிபதி புடின் தலைமையிலான ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவில், உக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் (Donetsk and Lugansk) பிராந்தியங்களை புதிய சுதந்திர நாடுகளாக ஏற்றுக்கொண்டதுடன் பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனை ஆக்கிரமிக்க தனது படைகளை அனுப்பியதன் மூலமாக புதிய உலக ஒழுங்கிற்கு சவால் விடுத்துள்ளார்.

ரஷ்யப் படைகள் வான்வழி, தரைப்படைகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைனை தாக்கிவருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, நேட்டோ மற்றும் உலக நாடுகள் (ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு) தொடர்ச்சியான அழைப்பை விடுத்தும் ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஐநா பொதுச் சபையின் சிறப்பு அமர்வு உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்க அழைப்பு விடுத்திருந்தது. நாற்பத்தொரு நாடுகள் அமெரிக்காவின் இந்த அழைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகிய நிலையில், நான்கு நாடுகள் (சிரியா, வட கொரியா, பெலாரஸ், ​​எரித்திரியா) ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைப் பற்றி பேசுகின்றபோது புட்டினோ தனது அணு ஆயுதப் படைகளை உசார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளதன் ஊடாக அணுசக்தி போர் பற்றி பேசுகிறார். கடந்த இரண்டு வாரங்களாக, ரஷ்யா தொடர்ந்து உக்ரேனின் இராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யா எதிர்பார்த்ததைவிட உக்ரைனிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை. பெலாருஸ் (உக்ரேன்) எல்லையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டபோதும் காத்திரமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கு நாடுகளிடம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகளில் அங்கம் வகிக்கும் உறுப்புரிமையைக் கோருகின்ற போதும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அவரது கோரிக்கையை ஏற்கத் தயக்கம் காட்டுகின்றன. அவை உக்ரேனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. அதே தருணம், ரஷ்ய-உக்ரேன் மோதலில் நேரடியாக ஈடுபடப்போவதில்லை என்று அமெரிக்காவும் நேட்டோவும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. “எங்களுக்கு முன்னால் இருப்பது பயங்கரவாத அமைப்பு அல்ல. எங்களுக்கு முன்னால் இருப்பது ஒரு அணுசக்தி (அரசாகும்)” என்று அமெரிக்க ஜனாதிபதி பைடென்(Joe Biden) கூறினார்.

அமெரிக்காவும் மேற்குலகின் சக்திமிக்க நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் மேற்கு நாடுகளின் பெரும்பாலான எரிபொருட் தேவைகளை ரஷ்யாவே நிறைவுசெய்கின்றது. இதனால் இந்தத் தடைகள் மேற்கு நாடுகளிலும் அதே அளவிலான தாக்கத்தை கொண்டுவருமானால் ரஸ்யா மீது பொருளாதாரத் தடைவிதிக்கும் நாடுகள், எவ்வளவு தூரம் அந்தப் பாதிப்பிலிருந்து தாக்குப்பிடிக்க முடியும்? மேற்குலகு (எரிபொருளுக்காக) ரஷ்யாவைச் சார்ந்திருப்பது போல் ரஷ்ய (பொருளாதாரம்) மேற்கு நாடுகளை சார்ந்து இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. (மேற்கு நாடுகள்) ரஷ்ய அரசாங்கத்தினதும் ரஷ்ய பில்லியனர்களின் சொத்துக்களை முடக்குவதனால், அவர்கள் அத்தகைய தடைகள் மற்றும் சிரமங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான வேறு இடங்களை நோக்கிப் போவார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் இருப்பதை விரும்பாத புடின், உக்ரைனுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்படுவதன் மூலம் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனப்படுத்த விரும்புகிறார். “இப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை புடின் விரும்புவதுடன், கருங்கடலையும் தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவதாகக் கூறும் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) ஜோஹன் போல்டன் (Johan Bolton), இப்போது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதன் ஊடாக அமெரிக்க, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சவால் விடுத்துள்ளதுடன், அவர் எதிர்வரும் ஆண்டுகளில் சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்குவதுடன் (USSR) WARSAW வை மீண்டும் அமைப்பது அவரது நோக்கமாக இருக்கலாம்” எனக் கூறுகிறார்.

(தனது நாட்டில்) ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதுடன், அதன் நட்பு நாடுகளையும் அவ்வாறு செய்ய தூண்டுகிறது. ஆனால் (பல)மேற்கு நாடுகள் அவ்வாறு செய்யத் தயங்குகின்றன. அமெரிக்கா (தனது தேவையில்) 8 வீதமான எண்ணெயை ரஸ்யாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. ஆனால் மேற்கு (ஐரோப்பிய) நாடுகள் அமெரிக்காவை விட அதிகமான எண்ணையை (எரிசக்தியை ரஸ்யாவிலிருந்து) இறக்குமதி செய்கின்றன. இப்போது ஜனாதிபதி புடின் ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை முற்றாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

உக்ரைனின் (ரஸ்யாவின் ஒரு மாகாணமாக 2014ல் இணைத்துக்கொள்ளப்பட்ட) கிரிமியாவை (Crimea) ரஷ்யாவின் ஒரு பகுதியாகவும், டோனெற்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் (Donetsk and Lugansk ) ஆகியஉக்ரேனின் இரு கிழக்குப் பகுதிகளையம் சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதுடன், நேட்டோவில் சேரபோவதில்லை என்று அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தால் மட்டுமே உக்ரைனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவோம் என்று மோஸ்கோ மீண்டும் கூறுகிறது.

ரஷ்யாவுடனான இந்த யுத்தத்தில், அமெரிக்காவிடமிருந்தோ மேற்கு நாடுகளிடமிருந்தோ உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அவர்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. அவர்களது ஆதரவின் அளவில் ஜெலென்ஸ்கி ஏமாற்றமடைந்ததாகத் தெரிகிறது. இப்போது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரிந்து சென்ற பிராந்தியத்தியங்களான டொனெற்ஸ்க், லுகான்ஸ்க் மற்றும் கிரிமியா விடயத்தில் ரஸ்யாவுடன் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்கு அழுத்தம் கொடுக்கபோவதில்லை எனவும் கூறுகிறார்.

நீங்கள் எங்களை மீட்கவோ அல்லது எங்கள் (கோரிக்கைகளுக்கு) முழுமையாக ஆதரவு வழங்கவோ தவறினால் நாங்கள் சமரசத்திற்கு போவதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை, அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் கூறப்பட்ட செய்தியாக இருக்கலாம். ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்று சமரசம் செய்து ஏற்றுக்கொள்வது நல்லது. மேற்குலகின் ஆதரவில்லாமல் தனியாகப் போராடுவதைவிட, ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்று சமரசம் செய்துகொள்வதைத் தவிர வேறு தெரிவுகள் உக்ரேனுக்கு இல்லை.

எந்த வெளிநாட்டினதும் ஆதரவோ அல்லது தலையீடோ இல்லாமல் இறுதிவரை தனியாகப் போராடுமேயானால் இறுதியில் உக்ரைனை ரஷ்யா முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும். இது அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒரு பெரிய அடியாக அமையும். ஏனென்றால், நீண்ட காலமாக தங்களின் பங்காளராக மாற முயன்றும் அதன் இலக்கை அடைய முடியாத ஒரு நாட்டின் விருப்பத்திற்கு, இவர்களின் பொறுப்பின்மையும் அறியாமையும் பெரும் இழப்புக்களையும் அழிவை மட்டுமே பெற்றுக் கொடுத்தது. இந்த நகர்வு மூலம் அமெரிக்காவின் புதிய உலக ஒழுங்கு முறைமையை இத்தனை விரைவாக ரஸ்யாவால் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்று யாரும் எளிதில் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

சோவியத் காலத்து MIG-29 போர் விமானங்களை அமெரிக்க இராணுவத்தளங்கள் ஊடாக உக்ரேனுக்கு அனுப்பும் போலந்தின் சமீபத்திய முன்மொழிவு அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது. இதற்கு ரஸ்யாவின் எதிர்வினை அதிக ஆபத்துமிக்கதாக இருக்கும் என்கின்ற காரணத்தால் ரஷ்யாவை மேலும் சீண்ட விரும்பவில்லை என்று அமெரிக்கா கூறியது .நேட்டோவை போரில் ஈடுபடுத்த விரும்பவில்லை என்றும் உக்ரேனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளப்போவதாகவும் பென்டகன் (Pentagon) கூறியது. உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, (அணுவாயுத நாடுகளுக்கிடையே) போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சக்தியை மட்டுப்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. ரஷ்ய படையெடுப்பு, வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் மற்றும் ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பான அமெரிக்க இராஜதந்திர ஆற்றல் குறித்தும் இது கேள்விகளை எழுப்புகிறது.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமித் ஹர்சாய் (Hamid Karzai) த இந்து (The Hindu) பத்திரிகையிடம், “உக்ரேன் ஆப்கானிஸ்தானின் படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சக்திபடைத்த நாடுகள் தனது (உக்ரேனில்) நாட்டில் மறைமுக போர்களை நடத்த இடமளிக்கக் கூடாது” என்று கூறுகிறார். புடினின் படையெடுப்பும் அணு ஆயுத அச்சுறுத்தலும் அமெரிக்காவையும் நேட்டோவையும் மோதலில் ஈடுபடாமல் தடுத்தது. அவர்கள் தலையிட்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மூன்றாம் உலகப் போர் தொடங்கினால், அது அணு ஆயுதப் போராக இருக்கும், இது முந்தைய இரண்டு உலகப் போர்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். மேலும், ரஷ்ய பொருளாதாரத்தின் அளவு, அதன் இராணுவ வலிமை, அணுசக்தி வல்லமை மற்றும் ரஷ்ய எரிபொருளில் ஐரோப்பிய நாடுகள் சார்ந்திருத்தல் ஆகியன அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கிற்கு சவால் விடும் அளவிற்குப் ரஸ்யாவைப் வலிமை மிக்கதாக மாற்றியுள்ளது.

ரஷ்யா, சீனா தொடர்பான அமெரிக்காவின் நடத்தையும், பொருளாதாரத் தடைகளும் அந்த இரு நாடுகளை ஒன்றிணைத்ததோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தான், ஈரான், வடகொரியா போன்ற மேலும் பல நாடுகளின் பார்வைகளை இந்த இரண்டு நாடுகளை நோக்கி திரும்ப வைத்துள்ளன.

மூலம்; Modern Diplomacy
Published on March 14, 2022
By Mansoor Ahmed
தமிழில் – ரவி மகாராஜா

Spread the love