68 கோடி ரூபா பொருட்களுடன் மீண்டும் இலங்கைக்கு வரும் தமிழக கப்பல் 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கட்டம் கட்டமாக நிவாரணப் பொருள்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால் இனியும் தாமதிப்பது நன்றாக இருக்காது என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிபுரிந்திடும் வகையில் 18.05.2022 அன்று ரூ.30 கோடி மதிப்பிலான 9045 மெட்ரிக் தொன் அரிசி, ரூ.1.5 கோடி மதிப்பிலான 50 மெட்ரிக் தொன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ.1.44 கோடி மதிப்பிலான 8 தொன் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் அடங்கியவை இலங்கைக்கு சரக்குக் கப்பலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று 22 ஆம் திகதி காலை 10 மணியளவில் இரண்டாம் கட்டமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பலின் மூலமாக ரூ.48.30 கோடி மதிப்பிலான 14,712 தொன் அரிசி, ரூ.7.50 கோடி மதிப்பிலான 250 தொன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ.11.90 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love