4 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து!

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் மட்டும் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பின்போதும் பலமுறை விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து துறைக்கு அடிமேல் அடி விழத் தொடங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் அகன்று விட்டதாக சர்வதேச நாடுகள் நிம்மதி அடைந்து கொண்டிருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாத ம் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் விறுவிறுவென மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது.

டிசம்பர் மாத இறுதி காலத்தில்தான் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து மிகவும் பிஸியாக இருக்கும். ஆனால் அதற்கு தலைகீழான ஒரு நிலையை ஒமிக்ரோன் தற்போது ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு விமானப் போக்குவரத்து துறை முற்றிலும் முடங்கிப் போனதால் அங்கு பணியாற்றிய பலர் வேலையை இழந்தனர்.

ஒமிக்ரோன் காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கிப் போனால், இப்போதும் விமானத்துறையில் பணியாற்றுவோர் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஒமிக்ரோன் பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா, கொரோனாவுடன் பெருந்தொற்றுக் காலம் முடிந்து விட்டதாக மனித சமூகம் நினைக்கக் கூடாது. அடுத்ததாக பெருந்தொற்று வந்தால் அதனை எதிர்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளது.

Spread the love