22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியதால் அரச உயர் பதவிகளிலுள்ள இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களும் பதவி விலகவேண்டும்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக அங்கம்வகிக்க முடியாது என்பதனால் 10 எம்.பி.க்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கவுள்ளனர். எனவே அவர்கள் கௌரவமான முறையில் பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் 43ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசில் உயர் மட்டப் பதவிகளை வகித்து வரும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களும் பதவிகளிலிருந்து விலகும் தீர்மானத்தை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் கூறுகையில்,

1978 அரசியலமைப்பில் ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரம்பற்ற அதிகாரங்கள் சர்வாதிகாரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அதன் மூலம் ஜனநாயகத்தை சுருங்கச் செய்யலாம் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த அரசியலமைப்பிற்குள்ளும் ஜனாதிபதியின் தரப்புக்கு பாராளுமன்ற பெரும்பான்மை கிடைக்காவிடில் 2002 ஆம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு நடந்த சம்பவத்தினாலும் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கு நடந்த சம்பவத்தினாலும் பிரச்சினைகள் எழும்.

இதன் காரணமாக 1994 ஆம் ஆண்டு திருமதி சந்திரிகா மற்றும் 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவைப் போன்று இந்த ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக பல அரசியல் கட்சிக் குழுக்கள் உறுதியளித்தன. ஆனால் அதன் பின்னர் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பொது வாக்கெடுப்புக்குச் செல்லாமல் பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறைமையையும் சேர்த்து 2015ஆம் ஆண்டு கலப்பு முறையை எட்டினோம்.

ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு வரம் பற்ற அதிகாரங்கள் தேவை என்பதும், 2022 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 1978ஆம் ஆண்டு மீண்டும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படுவதும் வெளிப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தின் 2/3 அதிகாரத்தால், அவரது தவறான நிதி முடிவுகளால் நாடு திவாலானதாக மாற்றப்பட்டது. அதன் காரணமாக மீண்டும் நீதித்துறை, பொலிஸ் சேவை மற்றும் பொது சேவையின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்பிருந்ததை விட ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் கிடைத்துள்ளதாக சிலர் கூறலாம். அதற்குக் காரணம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்தான்.  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து  சட்ட வாதங்கள் முன்வைக்கப்படலாம், ஆனால் அதுதான் தற்போதைய நிலை.அத்துடன் இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிகவும் தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தனர். இரட்டை பிரஜாவுரிமை கொண்ட 10 பேர் எம்.பி.க்களாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இரட்டைக் பிரஜாவுரிமை வைத்திருப்பவர்கள் அனைவரும் எம்.பி. பதவிகளிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டும். இலங்கையில் உள்ளவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை கொடுத்தாலும் பாவாயில்லை, நாட்டுக்கு முதலிடுகளை கொண்டு வாருங்கள், தொழில்களை மேம்படுத்துங்கள், நாட்டுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குங்கள், ஆனால் மக்களின் இறையாண்மையை பயன்படுத்தும் விஷயங்களை அனுமதிக்கவே கூடாது.

வெளிப்படையாக பசில் ராஜபக்சவுடன் ஒரு குழு இதனைத் தவிர்த்து வருவதை நாம் காண்கிறோம். ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30 பேர் வாக்களிக்கவில்லை. எமது கட்சியின் ஸ்தாபகர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பை தடுப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றோம் என பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமான, ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். எதிர்காலத்தில் அவர் பாராளுமன்றத்திற்கு வரலாம். பிரதமர் பதவி கிடைக்கும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். என்ற நம்பிக்கை இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் அவர் அமெரிக்க குடியுரிமையை துறந்திருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் தன்னிச்சையாக செயற்பட்டனர். பாராளுமன்றத்தையும் ஜனாதிபதியையும் தாங்கள் தான் கட்டுப்படுத்துவதாக நினைத்தார்கள். நாங்கள் சொல்வது போல் இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறினர். ஆனால் 22 ஆவது திருத்தம் மீதான வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பொமுனவின் பசில் தரப்புக்கு 113 எம்.பி.க்கள் அல்ல 20 எம்.பி.க்கள் கூட இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கம் உடனடியாக முக்கியமான சட்டங்களை, குறிப்பாக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு, நிதி ஒழுங்கு முறைச்சட்டம் நவீனப்படுத்தப்பட வேண்டும், மத்திய வங்கியை சுதந்திரமாக்க வேண்டும். அந்தச் சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கக்கூடிய வகையில் நிதி பொறுப்புக்கறல் சட்டம், பொறுப்பு முகாமைத்துவம் போன்றவற்றை நாம் பலப்படுத்த வேண்டும் என்றார்.

Spread the love