1000 ரூபாவின் மதிப்பு 200 ரூபாவாக குறைந்தது

பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாவின் மதிப்பு 200 ரூபாவாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் செலவினங்களை உயர் மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே மக்கள் மீது பாரியளவிலான வரிகள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வட்டி வீதத்தை அதிகரிப்பதுடன் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதுமே செய்ய வேண்டும். அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட வரித்திருத்தங்கள் முறையான ஆய்வுகள் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் செலவு மற்றும் வருமானம் இரண்டையும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் நுகர்பொருட்கள் இறக்குமதிக்காக 557 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்கு 320 பில்லியன் ரூபாவும், மரக்கறிகள், பழங்கள், சீனி, இனிப்புகள் மற்றும் மசாலாப் பொருட்களுக்காக 138 பில்லியன் ரூபாவும், வாசனைத் திரவியங்களுக்காக சுமார் ஒரு பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 1.7 பில்லியன் ரூபாவும், தளபாடங்களுக்கு 2.4 பில்லியன் ரூபாவும், ஆடை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 4.6 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் செப்ரெம்பர் மாதத்துக்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் வருடத்தின் 1 மீது வருட பணவீக்கமானது 73.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 70.2 வீதமாக காணப்பட்டது. மையப் பணவீக்கம் 2022 ஆகஸ்ட் மாதத்தில் 60.5 வீதத்திலிருந்து 2022 செம்ரெம்பர் மாதத்தில் 64.1 வீதம் வரை அதிகரித்துள்ளது. வருடத்தின் மீது உணவு பணவீக்கமானது 85.8 வீதமாகவும் உணவல்லா பணவீக்கமானது 62.8 வீதமாகவும் அதிகரித்துள்ளது.

Spread the love