138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி 200 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று (03) கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இத்திட்டத்திற்கான அனுமதி, இட ஒதுக்கீடு போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான மின்சாரத்தினை தடையின்றி வழங்க முடிவதுடன் நாட்டிற்கான மின்சார உற்பத்திக்கு சிறிதளவு பங்களிப்பும் வழங்க முடியும்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், துறைசார் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love