13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- குப்புசாமி அண்ணாமலை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்திலுள்ள House of Lords அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

இந்தியாவும் இலங்கையும் மிக தொன்மையான நாகரிகத் தொடர்பை கொண்ட நாடுகள் என கூறியுள்ள குப்புசாமி அண்ணாமலை, 2014 ஆம் ஆண்டின் பின்னரே பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கியதாக கூறியுள்ளார். 

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய வரலாற்று கடமை இந்தியாவிற்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள குப்புசாமி அண்ணாமலை, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். 

தமது இலங்கை பயணத்தின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி இதனை வலியுறுத்தியதாகவும் இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் குப்புசாமி அண்ணாமலை தமது உரையின் போது சுட்டிக்காட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக அரசியலின் அதிகாரப் போட்டியில் இலங்கை பலியாகிவிடக்கூடாது என்பதிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மிகவும் கவனமாக உள்ளதாக குப்புசாமி அண்ணாமலை இதன்போது தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love