ஸ்வீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

மனித சமூகத்தின் பரிணாமம் தொடா்பான ஆய்விற்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவிற்கு (Svante Pääbo)நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு தொடா்பான அறிவிப்பு தெரிவுக்குழுவினால் நேற்று (03) அறிவிக்கப்பட்டது.  இதன்போது, மனிதா்களின் பரிணாமம் (Ancestors’ DNA) தொடா்பாக ஆய்வுகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வான்டே பாபோவிற்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மனிதா்களின் பரிணாமம் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதா்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்) மனிதா்களின் முந்தைய பரிணாமமான நியாண்டா்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாா்.  நியாண்டா்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாகத் தனது ஆய்வின் மூலமாக அவா் கண்டறிந்து தெரிவித்தாா்.

முந்தைய இனக்குழுக்களில் இருந்து மனிதா்களின் இனக்குழு தனித்துவமானது என்ற அவரது கண்டுபிடிப்பால், மனிதா்களின் நோய் எதிா்ப்பு மண்டலம் குறித்து அதிக தகவல்கள் தெரியவந்ததாக நோபல் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.  19ஆம் நூற்றாண்டின் மத்தியில் நியாண்டா்தாலின் எலும்புகள் கண்டறியப்பட்டு, மரபணு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆராய்ச்சியின் மூலமாக மனிதா்களின் பரிணாம வளா்ச்சி குறித்து தெரியவந்ததாக தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. 

பாபோ குழுவினரின் கண்டுபிடிப்பானது கொரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுகளுக்கு எதிராக மனிதா்களின் மரபணு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள உதவியதாகக் குழு தெரிவித்துள்ளது. நோபல் பரிசு பெற்றுள்ள ஸ்வான்டே பாபோவிற்கு சுமாா் 9 இலட்சம் அமெரிக்க டொலா் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. 

Spread the love