ரஷ்யா – உக்ரைன் மோதல், இலங்கை பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துமா?

ரஷ்யா – உக்ரைன் மோதலால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் நிலைமையே காணப்படுகின்றது என்றும், இதனால் இது இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யா – உக்ரைன் மோதல் நிலையில், உலக சந்தையில் கச்சாய் எண்ணெய்யின் விலையானது, பீப்பாய் ஒன்றுக்கு 115 டொலர்களாக காணப்படுகின்றது. எரிபொருளுக்கான பணத்தை செலுத்த முடியாத நிலையிலேயே நாமும் உள்ளோம். அதேபோல் ரஷ்யாவானது டொலர் மற்றும் பவுண்ஸ் ஆகிய இரண்டையும் அங்கீகரிக்காது போனால் முற்றுமுழுதாக ரூபாவின் நிலைமை மாறுபடும். ரூபாவுக்கான சமநிலைத்தன்மை இல்லாது போகும்.

அத்துடன் ரஷ்யா திரவ எரிவாயுவை பெற்றுக்கொள்ளாது போனால், கட்டாரே ஐரோப்பிய நாடுகளுக்கான திரவ எரிவாயுவை வழங்கும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் எமக்கு திரவ எரிவாயு இல்லாது போகும். இதனால் திரவ எரிவாயுவின் விலையும் அதிகரிக்கும். இப்போது எமது பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நிலைமைகள் குறித்து அறிக்கையொன்றை சபையில் முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Spread the love