ரஷ்யா இனப்படுகொலை நடத்துகிறது..! உக்ரைன் ஆவேசம் சர்வதேச நீதிமன்றம் தலையீடு

போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துகிறது ரஷ்யா, என்று உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக செய்திகள் தெரிவித்து நிற்கின்றன. கடந்த அரை மாதத்தினைக்கடந்தும் ரஷ்யாவின் உக்ரைன் மீதான கொடூர தாக்குதல்கள் இதுவரை குறைந்த பாடில்லை மாறாக உக்கிரமான தாக்குதலை அது அதிகரித்த வண்ணமேயுள்ளது.

ரஷ்யா தனது கடும் தாக்குதல்களை உக்ரைனின் பொதுச்சொத்துக்களான மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது தயவுதாட்சண்யமின்றி சரமாரியாகத் தொடுத்தவண்ணமேயுள்ளது. மேலும் உக்ரைனது முக்கிய நகரங்களின் மீதும் வான்வழி தாக்குதல் நடத்திய வண்ணமே உள்ளது. இதில் பல கட்டிடங்கள் உருக்குலைந்தன, ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்கள் காரணமாக நகரில் சகல வழிகளும் அடைபட்டு மிகவும் மோசமான நிலையில் அப்பிரதேசங்கள் காணப்படுகின்றன.

உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப்பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது.

தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுங்கு குழிகளில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக்கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த மனு மீதான விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது.  ஆனாலும் உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் போர் என்ற பெயரில் தங்களது நாட்டுக்குள் புகுந்து ரஷிய படைகள் சட்ட விரோத தாக்குதல்களை  நடத்தி வருவதாகவும், போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது கடும்  தாக்குதல் நடத்துவதாகவும், உக்ரைன் ரஷ்யா மீது குற்றம் சாட்டியது. உக்ரைனின் மனு மீதான விசாரணையை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளையில்  நாளை சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது ரஷ்யாவுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரிய வரும். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால்,  வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் இப்பிரச்சனையை ஒப்புவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

.

Spread the love