மனித உரிமைகள் மீறல்களால் ஐ.நா.வின் கறுப்புப் பட்டியலில் இலங்கை

அதிகரித்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 42 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களை, கைது செய்தல், சிறை வைத்தல், துன்புறுத்தல், கண்காணிப்பு உள்ளிட்ட பழிவாங்கல்களில் ஈடுபடும் நாடுகளாக 193 நாடுகளில் 42 நாடுகளில் ஐ.நாவின் கறுப்பு பட்டியலில் உள்ளன. அவற்றில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஐ.நா.வுடன் ஒத்துழைத்ததற்காக இந்த செயற்பாட்டாளர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த பல குழப்பமான போக்குகளை சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலாளரின் வருடாந்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எவ்வாறு பழிவாங்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவோர் எவ்வாறு மிரட்டல்களுக்கு ஆளானார்கள்? என்பதை அறிக்கை விவரிக்கிறது. பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல் மற்றும் இணையவழி கண்காணிப்பு உள்ளிட்ட உரிமை மீறல்கள் குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா.வுடன் ஒத்துழைக்க முயற்சித்தவர்களும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கருதப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் உட்பட மூன்றில் ஒரு பகுதியினர் அச்சம் காரணமாக ஐ.நாவுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் அல்லது பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக தங்கள் பெயர்களை வெளியிடாமல் தவிக்குமாறு கேட்டுக் கொண்டனர் என அறிக்கை கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை ஐ.நா.விடம் எழுப்புவதற்காக மக்கள் எந்த அளவிற்கு பின்தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. இந்த எண்ணிக்கை அதிர்ச்சியாக இருந்தாலும் அறியப்படாத பல பழிவாங்கல் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம் என மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love