மக்கள் விரும்பாத கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர்

பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் விரும்பாத கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவானதல்ல எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை ராகுல் கல்லூரியின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், நாம் மிகவும் கடினமான நேரத்தில் இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதானது அல்ல சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும், ஆனால் அவை பிரபலமான முடிவுகள் அல்ல. மக்கள் விரும்பாத கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டால், அது சிலருக்கு கஷ்டத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்துகிறது.

அந்த அழுத்தத்தின் மூலம், முடிவுகளை எடுத்தவர்கள் மீது பழி வரலாம். எத்தனை குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் வளைந்து கொடுக்காமல் சரியானதைச் செய்யும் திறமை இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை பற்றி அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது. தற்போதைய பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்கள் மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். இது கடினமானது என்பதுடன் குறுகிய காலத்திற்கு செய்யப்பட வேண்டும். அதன் மூலம் நாடு மீண்டுவரலாம். நாட்டில் உள்ள அனைவரும் நல்ல நிலைக்கு வரலாம் எனவும் தெரிவித்தார்.

Spread the love