மக்களின் எண்ணிக்கையில் தொய்வின்றி 18 நாட்கள் கடந்த காலி முகத்திடல் போராட்டம்

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் 19 ஆவது நாள்(27) இன்றாகும்.

18 நாட்கள் கடந்தும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சி சார்பற்ற போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்படவில்லை. ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை மறித்து மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ள பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகம என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில், தாம் இராஜினாமா செய்யப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று(26) அறிவித்திருந்தார்.

Spread the love