பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம்

பொருளாதாரத்தை வலுப்படுத்த பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரமன்றி ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம் என்று வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தகவல் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் என்பன பலப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கிராமத்தை நோக்கிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தேசிய நெருக்கடியின் போது, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அந்த நிறுவனங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்..

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், கிராம மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கடந்த காலத்தில் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டகளங்கத்தை துடைத்து எரிவதற்கு ஊடகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று (28) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது காலி மாவட்ட எம்பி ஷான் விஜேலால் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறப்பான ஊடக கலாசாரத்தை உருவாக்குவது முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர், ஊடக நிறுவனங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுயமாக நிதி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நிறுவனமாக அவை இயங்குகின்றன.இதனால் அவற்றில் அரசாங்கம் தலையீடு செய்வது சிறந்தது அல்ல. அரச ஊடகம் தனியார் ஊடகம் என இரண்டிற்குமே சமநிலை வழங்கப்பட்டுள்ளது என்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில் இந்து நிறுவனம் நட்டத்தில் இயங்கிவருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த சில மாதங்களாக அது இலாபத்தில் இயங்கிவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 25 மில்லியன் ரூபாவையும் நவம்பர் மாதம் 30 மில்லியன் ரூபாவையும் அந்த நிறுவனம் இலாபமாகப் பெற்றுள்ளது.

அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில், எத்தகைய அழுத்தங்களையும் பிரயோகிப்பதில்லை. தனியார் ஊடகம் அரச ஊடகம் என பாரபட்சமின்றி அனைத்தும் சுதந்திரமாக செயல்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

Spread the love