பொருட்களின் விலை சடுதியாக உயர்வடையும்

வரலாறு காணாதவாறு டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்கும் அறிகுறி காணப்படுகின்றது.

நாணய மாற்று வீதத்தை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய நெகிழ்வுப் போக்குடன் தீர்மானிப்பதற்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, நேற்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்திருந்தது. சுமார் ஒரு வருடமாக டொலர் பெறுமதியை 202 ரூபா என்ற அளவில் நிலையாக பேணியதையடுத்து, இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நாணய மாற்று வீதம் சுதந்திரமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளித்தது.

நாணய மாற்று வீதம் நெகிழ்வுப்படுத்தப்பட்டதன் பின்னர் அரச வங்கிகளில் டொலரின் விற்பனை விலை நேற்று 230 ரூபா வரை அதிகரித்தது. எனினும், நேற்று டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக பதிவாகியது. இரண்டு நாட்களுக்குள் டொலரொன்றின் விலை 58 ரூபாவால் அதிகரித்துள்ளது. இது 29% அதிகரிப்பாகும். டொலரின் விலை அதிகரிக்கும்போது இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் வலைகள அதிகரிக்கின்றமை வழமையாகும். டொலரன விலை 260 ரூபாவாக நிலையாக இருக்கும்போது அரசாங்கம் வரிக்குறைப்பு அல்லது நிவாரணத்தை வழங்காத பட்சத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியவசிய பொருட்களின் விலை குறைந்தது 29 ரூபாவால் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது இலங்கை அரசு நிவாரணம் வழங்கும் நிலையில் இல்லை.

இந்த நிலையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 51 ரூபாவாலும் ஒரு லீட்டர் டீசலின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதேவேளை, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 824 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 44 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 45 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது. இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால்மா பக்கெட் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

Spread the love