பென்டகனை மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அலுவலக கட்டிடம்

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் அலுவலக கட்டிடத்தை மிஞ்சும் வகையில் இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் பெரிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை வரும் நவம்பரில் பிரதமர் மோடி திறக்கிறார். இதனால் பொருளாதாரம் உயர்ந்து வேலை வாய்ப்பு உருவாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்

80 ஆண்டுகளாக, அமெரிக்க இராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகன் உலகின் பெரிய அலுவலகக் கட்டிடமாக இருந்து வந்தது.ஆனால் இப்போது குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அந்தப் பெயர் கிடைத்துள்ளது. சுமார் 35 ஏக்கரில் 15 மாடிகளை கொண்ட கட்டிடம் 71 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. வைரம் தொழில் சார்ந்த, சுமார் 65,000 பேர் பணிபுரியும் இடமாக அமையும். இந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.

இந்தக் கட்டிடத்தின் வளாகம் 20 இலட்சம் சதுர அடியில் பொழுதுபோக்கு மண்டலம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை கொண்டுள்ளது.இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி நவம்பர் மாதம் திறந்து வைக்கிறார். இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரம்மாண்டமான அலுவலக கட்டிடம் அமைவது, சூரத் நகரின் வைர தொழில் வளர்ச்சியை எடுத்துரைக்கிறது. இது இந்தியாவில் தொழில் முனைவோருக்கு உற்சாகம் அளிப்பதற்கு ஒரு சான்றாகவும் உள்ளது. இது வர்த்தகம், மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படுவதுடன், நமது பொருளாதாரத்தை மேலும் உயர்த்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Spread the love