பெட்-எக்ஸ்(FedEx) நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்

உலகப் புகழ் பெற்ற பெட் – எக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

54 வயதான ராஜ் சுப்ரமணியம் 1991 ஆம் ஆண்டு பெட்எக்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டதுடன், அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராகவும் செயற்பட்டார். இந்த நிலையில், தற்போதுள்ள போட்டி தன்மையை எதிர்கொள்ளும் நோக்கில், ராஜ் சுப்ரமணியம் தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பெட் – எக்ஸ் நிறுவனத்தின் நிறுவுனர் 77 வயதான ஸ்மித், நிலைத்தன்மை , புதுமை, பொதுக்கொள்கை மற்றும் ஏனைய உலகளாவிய பிரச்சினைகளை மேற்பார்வையிடும் செயற்தலைவர் பதவிக்கு மாற்றம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வியட்நாமிலுள்ள அமெரிக்க இராணுவத்தளத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஸ்மித், 1973 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை, 389 குழு உறுப்பினர்கள் மற்றும் 14 சிறிய விமானங்களுடன் ஆரம்பித்தார். இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த, தகவல் தொழிநுட்பப்பட்டதாரியான ராஜ் சுப்ரமணியம், பெட்-எக்ஸ் நிறுவனத்தில் 27 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வருவதுடன், பெட் – எக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக நிலை பதவிகளையும் வகித்துள்ளார். அதேவேளை, பெட் – எக்ஸ் நிறுவனமானது, உலகம் முழுவதும் சுமார் 600,000 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love