நெருக்கடிகளைக் குறைப்பதற்காக அரசாங்கம் நடத்திய அவசர ஆலோசனை கூட்டம்!

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நெருக்கடிகளைக் குறைப்பதற்கான வழி முறைகள் தொடர்பாக அரசாங்கம் அவசர ஆலோசனைகளை நடத்தி வருகின்றது. நாடு அந்நியச் செலாவணிப் பற்றாக் குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தியாவசியமற்ற மேலும் 600 பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பது என்று அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

தற்போது இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஏறத்தாழ முடிந்துள்ள நிலையில், அத்தியாவசிய மற்ற பொருள்களின் இறக்குமதி நெருக்கடி நிலையை அதிகரிக்கும் என்று கருதப்படுகின்றது. அதனால் அவசியமான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் பொருள் பிரச்சினை பூதாகரமாகியுள்ள நிலையில், நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நீண்டநேரம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது என்று தெரியவருகின்றது. கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் எதிர்வரும் 5ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படாது என்று தெரிவித்தனர். அதேநேரம், நாட்டில் நேற்று எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்திருந்தது. நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இரவு வேளையிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காணப்பட்டனர். அதேவேளை, இலங்கை மத்திய வங்கியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களாகப் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எரிபொருள் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்துவது என்பது தற்போதைய பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ள ஆளுநர், அந்நியச் செலாவணிப் பிரச்சினைக்கே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மின்விநியோகம், எரிபொருள் விநியோகம் சில தினங்களில் சீராகும் என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றபோதும், நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Spread the love