தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படும் திருகோணேஸ்வர ஆலயம்

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, இதனை குறிப்பிட்டார். எனினும் இந்த விடயம் தொடர்பில் தாம் நேரடியாக சென்று கோயிலின் நிர்வாகத்தினருடன் பேசப்போவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார். இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். காசிக்கும், திருப்பதிக்கும் செல்கின்ற அரசியல்வாதிகள் அதே சிவபெருமான் வீற்றிருக்கும் திருகோணேஸ்வர காணியை அபகரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த தெய்வ நிந்தனையே நாடு வீழ்ச்சி நிலைக்கு செல்கின்றமைக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், இந்த விடயத்தில் உரிய தீர்வு காணப்பட்டு இந்து மக்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஓத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, திருகோணேஸ்வரம் கோயில் காணியில் வியாபாரத்தளங்கள், அமைக்கப்படவில்லை. மாறாக அவை, தொல்லியல் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர், கோயில் நிர்வாக சபையுடன் கலந்தாலோசித்து, அவர்களின் இணக்கத்துடனேயே இந்த வியாபாரத்தளங்கள் அமைக்கப்பட்டதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார். திருக்கோணேஸ்வர பிரதேசத்தில் பௌத்த அடையாளங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதனை, இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்ற முனைகின்றனர் என்று அவர் குற்றம் சுமத்தினார். இதேவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண ஆளுநர் கோயில் நிர்வாகசபையை அழைத்தது, ஆலோசனைக்காக அல்ல. அறிவுறுத்தலுக்காகவே அழைத்ததாக கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த வியாபாரத்தளங்களை நிரந்தரமாகவே அமைத்துக் கொடுக்கப்போவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக கருணாகரம் தெரிவித்தார். முன்னைய அரசாங்கக் காலங்களில் பல இனவாதிகள் இருந்துள்ளனர். எனினும் தமிழர்களுக்கு எதிரான முக்கிய இனவாதிகளாக கடந்த காலங்களில் செயற்பட்ட கே.எம்.பி ராஜரட்ன, ஆர்.ஜி சேனாநாயக்க, சிறில் மெத்யூ ஆகிய மூவரையும் இணைத்த ஒருவராக சரத் வீரசேகர செயற்படுவதாக கூறினார். இந்தநிலையில் ஒத்திவைப்பு விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடு இன்னும் பிரிந்து செயற்படுவதாக குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர். ஒவ்வொருவரும் வரலாறுகளை தெரிவிக்கின்றனர். எனினும் வரலாறுகளை பற்றி சிந்திக்காமல், நடைமுறையை பற்றி சிந்திக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆகழ்வாராட்சி விஞ்ஞானமாகும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் விரைவில் திருகோணமலைக்கு சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்போது இந்த பேச்சுவார்த்தையில் தாமும் பங்கேற்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டபோது அதற்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பை வெளியிட்டார். கோயிலின் நிர்வாகத்தினரை அழைத்து ஆளுநர் இந்த தீரமானத்தை எடுத்தநிலையில், ஏன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தமது கருத்தை வெளியிட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பிரச்சினை இருக்குமாக இருந்தால் அதற்கு தீர்வு இருக்கவே வேண்டும் எனவே இது தொடர்பில் ஆராய்வோம் என்று குறிப்பிட்டார்

Spread the love