திராய்க்கேணி விவகாரம் கலந்துரையாடலில்..

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட திராய்க்கேணி பகுதியில் அமையப்பெற்றிருந்த கேணியை மூடிய விவகாரம் சம்பந்தமாக, அண்மையில் எமது அகலிலும் அது தொடர்பான முன்னைய விடயமும் பகிரப்பட்டிருந்தது தெரிந்ததே, அவ்வாறு, கேணியை மூடிய விவகாரம் தொடர்பாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமரச கலந்துரையாடல் ஒன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனைப்பிரதேசத்துக்குட்பட்ட திராய்க்கேணி தமிழ்க்கிராமத்தின் பாரம்பரிய தொழிலான சலவைத்தொழிலுக்கான மூலாதாரமான நீர்நிறைந்த  கேணியை எவ்வித அனுமதியும் இல்லாமல் அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் அத்துமீறி மூடிவருவதாக  பொதுநல அமைப்புகள் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் அம்பாறை அரச அதிபரூடாகவும் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கமைவாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசசெயலாளர் பிரிவினுள் வருகின்ற ஒரேயொரு தமிழ்க்கிராமமே திராய்க்கேணிக் கிராமமாகும்.

இக்கிராம மக்கள் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பவர்களாக, பொருளாதாரச்சுமையின் மத்தியில்  மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

பரம்பரை பரம்பரையாக இக்கேணியில் தமது சலவைத்தொழிலைச் செய்துவருகின்றவர்கள் அம்மக்கள் ,அவர்களது முழுக்குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்துக்குமே அத்தொழிலில்தான் தங்கி வாழ்கின்றனர். இந்நிலையில் அப்பகுதி தவிசாளர் எந்த கலந்தாலோசனை முன்னறிவிப்பு போன்ற நடைமுறைக்காரணிகள் எதுவுமற்ற விதத்தில் அதனை மூட எத்தனித்த விடயமானது அராஜகம் என்றும் பிரதேச நிறுவனங்கள் பொதுமக்கள் இணைந்து அவர்மேல் குற்றம் சாட்டியிருந்தனர்.

அவ்விதம் பொதுமக்கள் அக்கரைப்பற்றுப் பொலிசாரிடம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து, அன்றையதினமே, பொலிசாரின் தீவிர பிரயத்தனம், முன்னெடுப்பு காரணமாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் ,இம்மண்போட்டு மூடும் செயற்பாட்டை உடனடியாக இடைநிறுத்தியதாக கிராமத்தலைவர் சி.கார்த்திகேசு தெரிவித்தார்.

அதேவேளை  இன்னொரு பகுதியாக திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் நிர்வாகம் சார்ந்தோரும், பரிபாலன சபையினரும் ,  இவ்வத்துமீறி மண்நிரப்பும் செயற்பாடு குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வரை எழுத்துமூலம் முறைப்பாட்டினைச் செய்திருந்தனர் என்பது எமது கடந்தபதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி பிரதேச செயலகத்தில் 3ம்திகதி  மாலை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஆலய பரிபாலன சபைத்தலைவர் சி.கார்த்திகேசு மற்றும்  செயலாளர் கி.புவனேஸ்வரன் உபதலைவர் ஆகியோரும் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். அங்கு அட்டாளைச்சேனை பிரதேசசெலயாளர் மேலும் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பிரதேசசபைக்குரிய குறித்தகேணியை மக்களிடம் கேளாமல் அபிவிருத்தி செய்யமுயற்சித்தமை தொடர்பில் தவிசாளர் ஆரம்பத்திலேயே தனது மனவருத்தத்தை கலந்துரையாடல் சபை கூடியபோதே  கூறிக்கொண்டு மன்னிப்பையும் கேட்டு நின்றார்..

தொடர்ந்து கலந்துரையால் இடம்பெற்ற போது அக்காணியில் சிறுவர் பூங்கா அமைத்துக்கொடுப்பதற்கும்.  அருகிலுள்ள சலவைத் தொழிலாளர் கட்டடத்தை புனரமைத்துத்துக்கொடுக்கவுமே, இவ் ஏற்பாட்டைத்தாம்  முன்னெடுத்ததாக தவிசாளர் அங்கு தன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்.

அதற்கு, அங்கு கலந்து கொண்டிருந்த திராய்க்கேணி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகத்தினர் தமது கருத்தை இவ்வாறு கூறினர்: அதாவது  “திராய்க்கேணி பிரதேச  பாலமுனை 06ஆம் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய பரிபாலனசபையினரின் கீழ் பராமரிக்கப்பட்டுவருகின்ற சலவைத் தொழிலாளருக்குரிய குளத்தையும் சலவைத்தொட்டி உள்ள கட்டடத்தையும் மாரி காலங்களில் குளத்தினைப்பாவித்து  வேலை செய்து கோடை காலத்தில் அதே வேலைகளைக் கட்டடத்தில்   பரம்பரை பரம்பரையாக செய்துகொண்டு வருகின்றனர், இதில் மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை”

ஆகவே அங்கு கட்டடம் திருத்தப்படலாம், காணியில் புடவைகள் காயவைக்க களம் அமைக்கப்படலாம், அதைவிட்டு சிறுவர்பூங்கா என்பது  தேவையற்றது என்றனர் ஆனாலும்  எதுவான போதும்  நாம் எம் மக்களிடம் கேட்டே சொல்வோம்.’ என்றும் தெரிவித்திருந்தனர்.

அதற்கு  “அப்படியானால் 3 நாள் அவகாசம் தருகிறோம் மக்களிடம் அவர்களது முதற்தெரிவான தேவைகளைக் கேட்டறிந்து சொல்லுங்கள். அதன்பிறகு மீண்டும்  கூட்டத்தைக்கூட்டி அதுசம்பந்தமான  தீர்மானங்களை எடுத்துக்கொள்வோம் ‘”என்று கலந்தாய்வுக்கூட்டத்தில் பிரதேச செயலகப்பிரிவினரால் கருத்து  முன் வைக்கப்பட்டது.

அதன்படி  இக்கலந்தாய்வின் நோக்கத்தினை நிறைவு செய்யும் முகமாக இன்று 6ம்திகதியும் 7ம்திகதியான நாளையும் திராய்க்கேணியில் கலந்தாய்வுக்கூட்டத்தின் கருத்தினை அறிவதற்காக மக்களது கருத்துக்கள் பெறப்படவிருப்பதாக தலைவர் சி.கார்த்திகேசு தெரிவித்தார்.

Spread the love