கோட்டாபய பாதுகாப்பாக வர ஏற்பாடு செய்யுங்கள்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு பரிந்துரை மேற்கொண்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க மற்றும் அதன் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு  அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தினால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உரிமைகளுக்கு கோட்டாபய ராஜபக்சவும் உரித்துடையவராக இருக்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தலின் பேரில் தனது இராஜினாமாவை சமர்ப்பித்ததாக பல முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன.

இந்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்சவிற்கு போதிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது, முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாடு திரும்ப உள்ளனர். தற்போதைய அச்சுறுத்தல்கள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர் நாடு திரும்பமுடியாது என்றும், அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த குடிமகன் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக நாட்டிற்கு திரும்ப முடியாவிட்டால், ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதுடன் அதை அகற்றுவது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே முன்னாள் ஜனாதிபதிக்கு மட்டுமன்றி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Spread the love