இலங்கைக்கு கடன் வழங்க இந்தியா நிபந்தனைகள் விதித்ததா?

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல்கள், விலைவாசி ஏற்றம் என்பவற்றினில் இருந்து நாட்டினை மீட்டெடுக்கும் முகமாக அதன் ஓர்பகுதியாக இலங்கை இந்தியாவிடம் கடன் பெற்றுக்கொண்டது. அக்கடனை வழங்கியபோது இந்தியா இலங்கைக்கு நிபந்தனைகள் ஏதும் விதித்ததா..? என்பது அரசியல் அரங்கில் தற்போதைய கேள்வியாகவுள்ளது.

இது இவ்விதம் இருக்கும் நிலையில் இந்திய அரசினால் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கே வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று முன்தினம் (18) மாலை நாடு திரும்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்குப்பதில் அளிக்கும்போது அவர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியாவானது – இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கிய போது அது எந்த விதமான நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் கூறினார். குறித்த ஒரு தொகை கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கும்போது, இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும் என்றார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமான உறவைப்பேணி வருகிறது, அத்துடன் இலங்கைக்கு தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக தாம் வழங்கவுள்ளதாக இந்தியப்பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சேதனப்பசளை உற்பத்திக்காக இந்தியாவின் ´நெனோ´ உர நிறுவனத்தினால் இலங்கைக்குப் போதியளவான உரத்தை வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு நாட்டின் பொருளாதார பின்தங்கல் நிலை காரணமாக  துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை விடுவித்து அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் இதன்போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Spread the love